ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது உக்ரேன் அரசாங்கம் போராளிகளுக்கு ஆயுதம் விற்பனை செய்திருப்பதாக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இது தொடர்பான குற்றச்சாட்டை உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷன்கோ, இலங்கையின் வெளிவிவகார அமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.
உதயங்க வீரதுங்க கடந்த ஒன்பது வருடங்களாக ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றியதுடன், உக்ரேனின் தலைநகர் கீவ் நகரத்தில் கிளப் லங்கா என்ற விருந்தகத்துக்கும் (Restaurant )உரிமையாளராக இருந்துள்ளாா்.
இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
உக்ரேனின் குற்றச்சாட்டின்படி உதயங்க வீரதுங்க, பிரிவினைவாதிகளுக்கு ரைபிள்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை விநியோகித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட கோத்தாவின் மிதக்கும் ஆயதக் களஞ்சியம் உலகின் ஒரு சில போராளிக் குழுக்களுக்கு ஆயுதம் விற்பனை செய்திருப்பதாக ஏற்கனவே கசிந்த தகவல்களுக்கும் இதற்கும் தொடா்புகள் இருக்கலாம் என்ற சந்தேகமும் இப்போது வலுப்பெற்று வருகின்றன.
உதயங்க வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மருமகன் என்ற வகையிலேயே உக்ரேனுக்கான தூதுவர் நியமனம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அரசியல் நியமனம் என்ற அடிப்படையில் அவர் புதிய அரசாங்கத்தினால் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார். என்றாலும் அவா் இதுவரை இலங்கை திரும்பவில்லை. இந்தக் குற்றச்சாட்டை தொடா்ந்து அவா் தலைமறைவாகியிருப்பதாக அறிய வருகிறது.
உதயங்க வீரதுங்க ரஷ்யாவுக்கான தூதுவராகப் பதவி வகித்த போது, சிறிலங்காவுக்கான பல ஆயுதக் கொள்வனவுகளுடன் தொடர்புபட்டிருந்தார்.
அவற்றில் சில ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பாக, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில், சிறிங்கா விமானப்படைக்கு, மிக்-27 தரைத் தாக்குதல் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரமும் அடங்கியுள்ளது.

0 Comments