இருப்பினும், நிகழ்காலத்தின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் (Geopolitical Agendas), தந்திரங்களையும் புரிந்துகொள்ள இயலாதவாறு பல்வேறு 'சிந்தனைப் பள்ளிகளுக்குள்' நாம் சிறைப்பட்டுக் கிடக்கிறோம்.
மத்திய கிழக்கின் கருப்புத் தங்கம் என வர்ணிக்கப்படும் எண்ணெய் வளம், அந்த மண்ணிற்கு வரமாக அமைவதற்குப் பதிலாக தீராத காயங்களையும், வலிகளையும் பரிசாகத் கொடுத்திருக்கிறது.
வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட, நாம் மறந்து போன ஒரு கசப்பான சதி அரங்கேற்ற நிகழ்வு பற்றிய பதிவு இது.
1953ம் ஆண்டு ஈரானில் சீஐஏ மற்றும் எம்ஐ6 உளவு நிறுவனங்களால் அரங்கேற்றப்பட்ட 'ஒபரேஷன் அஜாக்ஸ்' (Operation Ajax) என்ற ஆட்சிக் கவிழ்ப்பு பற்றியே நான் உங்களுடன் பேசப் போகிறேன்.
1950-களின் தொடக்கத்தில், ஈரான் ஒரு மகத்தான மாற்றத்தை நோக்கி நகர்ந்தது. மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முஹம்மது மொசத்திக் (Mohammad Mossadegh), ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார். ஈரானின் எரிசக்தி வளங்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும், அதற்கு வெளிநாட்டு சக்திகள் உரிமைக் கொண்டாட முடியாது என்பதில் அவர் உறுதியாக நின்றார்.
அக்காலத்தில், ஈரானின் எண்ணெய் கிணறுகள் அனைத்தும் பிரிட்டிஷ் நிறுவனமான 'எங்லோ-பெர்ஷியன் ஒயில் கம்பெனி' -APOC (இன்றைய British Petroleum BP நிறுவனம்) வசம் இருந்தன. மொசத்திக் எடுத்த ஒரு துணிச்சலான முடிவு சுரண்டல் சாம்ராஜ்யங்களை உலுக்கியது. அவர் ஈரானின் அனைத்து வளங்களையும் தேசிய மயமாக்கினார்.
தங்களது சுரண்டல் இலாபம் பறிபோவதைக் கண்டு சீற்றமடைந்த பிரிட்டன், அமெரிக்காவின் உதவியை நாடியது. இதன் விளைவாக, அமெரிக்காவின் CIA மற்றும் பிரிட்டனின் MI6 ஆகிய உளவு அமைப்புகள் இணைந்து ஈரானிய மண்ணில் ஒரு ரகசிய சதித்திட்டத்தை அரங்கேற்றின.
எகாதிபத்திய சக்திகளின் போர்முறையின் முக்கிய அங்கமான பொய்ச் செய்திகள் (Fake News) பரப்பப்பட்டன. மொசத்திக்கிற்கு எதிராகக் செயற்கையான கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன.
இதன் உச்சக்கட்டமாக, 1953 ஆகஸ்ட் மாதம் மொசத்திக் அதிகாரத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டார்.
ஒரு தேசத்தின் மக்களாட்சி ஜனநாயகம் நசுக்கப்பட்டு, மேற்கத்திய நாடுகளின் தாளத்திற்கு ஆடும் 'ஷா பஹ்லவி' (Shah) என்ற ஏகாதிபத்தியத்தின் அடியாளான மன்னர் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். ஈரானில் ஏகாதிபத்திய கொடுங்கோலர்களுக்கு தலையாட்டும் பொம்மை முடியாட்சி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.
இந்தச் சதிக்குப் பிறகு, ஈரானின் எண்ணெய் கிணறுகள் மீண்டும் அந்நிய நாடுகளின் வசமானது. ஈரான் நாட்டின் இறையாண்மை திருட்டு 'எண்ணெய் வியாபாரிகளின்' கைகளில் மீண்டும் அடகு வைக்கப்பட்டது.
மேற்கத்தைய, ஏகாதிபத்திய சக்திகளின் இந்த அநீதியே பிற்காலத்தில் (1979) வெடித்த ஈரானியப் புரட்சிக்கு வித்திட்டது.
அந்தப் புரட்சி, மத்திய கிழக்கில் அமெரிக்க அரசியல் நலன் காக்கும் அரபு நாடுகளின் தலைவர்களிடையே நடுக்கத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது. இன்று நாம் காணும் மத்திய கிழக்கின் குறுங்குழுவாத பதற்றமான சூழலுக்கும் இது அடிப்படையானது.
ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, மொசத்திக் கைது செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். சொந்த நாட்டு மக்களின் நலனுக்காகப் போராடிய அவர் மீது 'தேசத்துரோகக்' குற்றம் சுமத்தப்பட்டது.
தொடக்கத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சர்வதேச அளவில் அவருக்கு இருந்த செல்வாக்கையும் அவரது முதுமையையும் கருத்தில் கொண்டு, 1953 டிசம்பர் 21 அன்று அவருக்கு மூன்று ஆண்டுகள் தனிமைச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகாலச் சிறைவாசத்திற்குப் பிறகு (1956), அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், அந்த விடுதலை முழுமையானதாக இருக்கவில்லை. அவர் தனது சொந்த ஊரான அஹ்மதாபாத்தில் உள்ள இல்லத்திலேயே வாழ்நாள் முழுவதும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
1967-ம் ஆண்டு மார்ச் 5-ம் திகதி, தனது 84-வது வயதில் மொசத்திக் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று அஞ்சிய ஷா மன்னர், அவரை ஒரு பொது மயானத்தில் அடக்கம் செய்யக்கூட அனுமதி மறுத்தார்.
இறுதியில், மொசத்திக்கின் உடல் அவரது இல்லத்தின் ஒரு அறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் “எண்ணெய் அரசியலுக்காக” அரங்கேற்றப்பட்ட ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளும், பற்ற வைக்கப்பட்ட நெருப்பும் இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. மனித உயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன.
ஏமாளிகளான நாம் பல குறுங்குழுவாத முகாம்களுக்குள் முடங்கி.. பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அஸீஸ் நிஸாருத்தீன்
14.01.2026
8.45pm

0 Comments