Ticker

6/recent/ticker-posts

சாம்மாந்துறைத் தொகுதி மக்கள் அரசியல் வரலாற்றிலிருந்து படிப்பினை பெறுவது காலத்தின் தேவை

ஒலுவில் எம். எல்.பைசால் -காஷ்பி-

இவ்வாண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சம்மாந்துறைத் தேர்தல் தொகுதிக்கான பாராளுமன்ற பிரதிநிதியினை பெற்றுக் கொள்வது பற்றி பலரும் பல கருத்தரங்குகளையும், விழிப்புக் கூட்டங்களையும் நடத்துவதோடு  அத்தேர்தலில் போட்டியிடும் நோக்குடன்  பல  பொது  நல  திட்டங்கள் மூலம்  தனக்கான ஆதரவினை  திரட்டிக் கொண்டிருப்பதையும்  அவதானிக்கலாம்..
நாடாளுமன்ற தேர்தல் ஒன்றில் தனித்து நின்று நாடாளுமன்ற  பிரதிநிதி   ஒருவரை  பெற்றுக் கொள்வதற்குரிய பிரதேசமும்,தொகுதியும் என்றால் அது அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறைத் தேர்தல்  தொகுதிதான்..

  விகிதாசார தேர்தலின் பிற்ப்பாடு 2004. 2010 ஆண்டுகளில்  நடைபெற்ற தேர்தலில் தனது பிரதி நிதித்துவத்தினை  இழந்த  "'அம்பாரை மாவட்டத்தின்  பாராளுமன்ற அரசியலில் நீண்ட வராலாற்றினைக் கொண்ட சம்மாந்துறையின்"" பாராளுமன்ற பிரதிநிதித்துவதினை வரலாற்று ரீதியில்  அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் .

தொகுதி முறை பிரதி நிதித்துவ தேர்தல் நடைபெற்ற காலத்தில் அக்கிராமம் நடைபெற்ற பல பாராளுமன்ற காலங்களில் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துள்ளது.

 கல்முனைத் தொகுதியுடன் இணைக்கப் பட்டிருந்த வேளை 1952 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கிராமத்தினைச் சேர்ந்த  ஏ. எம் மேர்ஸா அவர்கள் கல்முனை கிராமத்தின்  எம். எஸ் காரியப்பர் அவர்களை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி அக்கிராமத்திற்க்குப் பெருமை சேர்த்துக் கொடுத்தது முதல் அதன் பாரளுமன்ற வரலாறு ஆரம்பிக்கின்றது...
  
1956 ம் ஆண்டு நடைபெற்ற   பாராளுமன்ற தேர்தலில் தனது கிராமத்தின் உறுப்புருமையினை இழந்து,  1960 ம் ஆண்டு தொகுதிகள் மீள் நிர்ணயத்தின் போது பொத்துவில் தொகுதியுடன் அது இணைக்கப் பட்டு அதன் பாராளுமன்ற உறுப்பினராக  எம். ஏ அப்துல் மஜீத் அவர்கள் தெரிவாகி தனது இழந்த உறுப்புருமையினை பெற்றது முதல் 1977 ம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில்  சம்மாந்துறை என்ற தனித் தொகுதி உருவாக்கப்பட்டு அதன் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக அவரே தெரிவாகி வரலாறும் படைத்தார்.

 1989 ம் ஆண்டு நடைபெற்ற  பாராளுமன்றத் தேர்தலில்     தொகுதி முறைத் தெரிவுக்குப் 
பதிலாக மாவட்ட பிரதிநித்துவ முறை அறிமுகப் படுத்தப் பட்டிருந்தது. தொகுதி முறை தேர்தல்களில்  வாக்களித்து அனுபவத்தினைப் பெற்ற வாக்காளர்களுக்கு இம்முறை ஒரு புதிய அறிவாகவே  இருந்தது.

 இத்தேர்தலில்  மு.கா கட்சியும்  முதன் முதலாக போட்டியிட்டிருந்தது.

 நீண்ட காலமாக பல கட்சிகளுக்கு தங்களது ஆதரவினை வழங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அக்கட்சியின் வருகை உணர்வுடன் கூடிய ஆதரவினை வழங்க உந்தப் படுத்தியது.இது கால வரை அரசியல் அதிகாரங்களைப் பெற்று வந்தவர்களை இக்கட்சி அவர்களின் அரசியல் பயணத்தினை முடிவுக்கு கொண்டுவரும் அளவிர்க்கு செல்வாக்குப் பெற்றது
 அம்பாரை மாவட்டதில் நீண்ட காலமாக அரசியல் வானில் கொடி கட்டிப் பறந்த பெரும் ஜாம்பவங்களுடன்  அக்கட்சியின் தலைவர்   முட்டி மோத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
 இந் நிலையில் பாராளுமன்றத்தில் சம்மாந்துறை கிராமத்தினை பிரதிநிதித்துவப் படுத்திய அப்துல்  மஜீத் அவர்கள் தனக்குப் பதிலாக  தனது மருமகன் நௌசாத்  அவர்களை  ஐ.தே. கட்சி சார்பாக போட்டியிட  வைத்திருந்தார்,இதே வேளை   யூ. எல். எம். முகைதீன் அவர்கள்  மு.க  சார்பாக போட்டியிட்டார்

புதிய தேர்தல்,அதன் விபரீதம் பற்றி அஷ்ரஃப் அவர்களும் அவரது கட்சியினரும் பல கூட்டங்களில் விளக்கங்களைக் கொடுத்து கொண்டே வந்தனர்..... 
இருப்பினும் தேர்தலின்  பெறுபேறு அன்று மு.க  விபரீதமான விளைவுகள் என்று சுட்டிக் காட்டியதற்க் கேற்ப்ப  கிடைக்கப் பெற்றது. 61325 வாக்குகளைப் பெற்ற மு,க ஒரு ஆசனத்தையும்,62600 வாக்குகளைப் பெற்ற ஐ. தே. க மூன்று ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. ஐ.தே.க சார்பாக போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியும்  தெரிவாக முடியாமலே போயிற்று.

 சம்மாந்துறைத் தொகுதியில்  மு.க  23820 வாக்குகளையும் ஐ.தே.க  6163 வாக்குகளையும் பெற்றன. வெறும் 1275 வாக்குகளால் தேர்தல் மூலமாக கிடைக்கவேண்டிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் அம்பாரை மாவட்டதில்  இழக்கப் பட்டிருந்தது.முழு அம்பாரை மாவட்டத்திற்குமான பாராளுமன்ற பிரதிநிதியாக பெருந் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் காணப்பட்டார்கள்.

 அஷ்ரஃப் அவர்கள் சம்மாந்துறைத் தாயின் மகன் என்பதால் அவர்களுக்குரியவராகவும், கல்முனை கிராமத்தினைச்  சேர்ந்த தந்தையின்  மகன் என்பதால் கல்முனை மக்களுக்குரியவராகவும், பொத்துவில் தொகுதி மக்கள் பல தடைகளையும் தாண்டி அவரை ஆதரித்ததனால் அவர்களுக்குரிய  பிரதிநிதியாகவும் பார்க்கப்பட்டார்.

 இந்நிலையில்  சம்மாந்துறை தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலமாக அப்துல் மஜீத்  அவர்கள் பாராளுமன்ற பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு  இராஜங்க அமைச்சராகவும் பொறுப்பாக்கப் பட்டார்.

அப்துல் மஜீத் அவர்களுக்கு பாராளுமன்ற பிரதிநித்துவம் கொடுக்கப் பட்டதால் சம்மாந்துறை மண் தொடர்ந்தும்  அதை   உறுதிப்படுதிக் கொண்டது.

1994 ம் ஆண்டு நடைபெற்ற  உளூராட்ச்சி சபைகளுக்கான தேர்தலில்  முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட 6 உள்ளூராட்ச்சி சபைகளில்  மு.க பொத்துவில் ,நிந்தவூர் ஆகிய இரு   உள்ளூராட்ச்சி மன்றங்களை இழந்ததனால் தலைவர் அறிவித்ததன் பிரகாரம் தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இராஜினாமாச் செய்ததையடுத்து யு. எல் .எம் முகைதீன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.. 
அவர் 1994,2000 ம் ஆண்டுகளில் நடை பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் முகைதீன் அவர்கள் மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2001 ம் ஆண்டு நடை பெற்ற 12 வது  பாராளுமன்ற தேர்தலில்  அன்வர் இஸ்மாயில் அவர்கள் மு,க மூலமாக களம் இறங்கி வெற்றி வாகை சூடினார்.

இத்தேர்தலில் மு,க முதன் முதலாக அம்பாரை மாவட்டதில் அதன் சின்னத்தில் 75257 வாக்குகளைப் பெற்று மூன்று பாராளுமன்ற  உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டது

12 வது பாராளுமன்றம் சுமார் 2 வருட காலத்திற்குள் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டமையினால் இலங்கை மூன்று வருட காலத்திற்குள் மூன்று பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது..

2004 ம் ஆண்டு நடைபெற்ற  பாராளுமன்ற தேர்தலில்  அன்வர் இஸ்மாயில் அவர்கள் முன்னாள் அமைச்சர் அதாஉள்ளா அவர்களுடன் இணைந்து  தேசிய பட்டியல் மூலம் தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்து கொண்டு மு.க கட்சிக்கு எதிராக தனது பிரசாரத்தினை முன்னெடுத்தார்,
இந்நிலையில் சம்மாந்துறைத் தொகுதியில்  பிரதேச சபைத் தலைவர் நௌசாத் அவர்களும்,மகாண அமைச்சர் மன்சூர் அவர்களும் மு,க சார்பாக போட்டியிட்டனர்.

மறு முனையில் மு.க வின் முக்கியஸ்தர்கள்   முன்னாள் அமைச்சர்களான அதாஉள்ளா, பேரியல் அஷ்றப் ஆகியோர்களின்  தலைமையில்  இணைந்து கொண்டதனால் அதன் தலைவர் அம்பாரை மாவட்டதில் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.  

அரசியலில் நீண்ட கால வரலாறு கொண்ட குடும்ப பின்னணியுடன்   நௌசாத் அவர்களும் மு,க கட்சியின் மூத்த போராளி என்ற அடை மொழியுடன் கூடிய கௌரவத்துடன் மன்சூர் அவர்களும் அன்வர் இஸ்மாயில் அவர்களுடன் பலத்த பலப் பரீட்சைக்குரிய களமாக சம்மாந்துறை தேர்தல் நிலை அன்று மாறியது.

தேர்தலின் பெறுபேறு மு,க ஏற்கனவே பெற்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை ஒன்றினை இழந்து சம்மாந்துறைத் தொகுதியில் 17688 வாக்குகளைப் பெற்று தோல்வியினைத் தழுவியது,  அன்வர் இஸ்மாயில்  அவர்கள் ஆதரவளித்த ஐ.ம.சுகூ  19117 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது.. 

அம்பாரையில் மு.க கட்சியின் மூலம் அதன்  தலைவரும், பைஸால் காசிம் அவர்களும் தெரிவாகினர். அதே வேளை சம்மாந்துறை தனது பிரதி நிதியினை இழந்தது ,
இருப்பினும் அன்வர் இஸ்மாயில் அவர்களை தேசிய பட்டியல் மூலமாக ஐ.ம.சு கூ  அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினராக  நியமித்தனால் சம்மாந்துறையின்  பிரதிநிதித்துவம் பாது காக்கப்பட்திருந்தது.

2007 ம் ஆண்டு அன்வர் இஸ்மாயில் அவர்களின் மரணத்தினை (அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக) தொடர்ந்து  சம்மாந்துறை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை  இழந்த நிலையினையை உணர்ந்தது. 
2008 ம் ஆண்டு கிழக்கு மகாண சபை  தேர்தலில் அம்பாரை மாவாட்ட பிரதிநிதித்துவத்தினைக் கொண்ட மு,க தலைவர் அப்பதவியினை இராஜினாமா செய்து திருமலையில் மகாண சபை வேட்பாளராக   களம் இறங்கினார்
இதனால்    நௌசாத் அவர்கள்  பாராளுமன்ற உறுப்பினரானாரக பதவியேற்றுக் கொண்டார், இழந்த பிரதிநிதித்துவம் மீள  கிடைக்கப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கனவு, விருப்பு நிறைவேறியது, நௌசாத் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை அம்மக்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியாகவே இருந்தது..... 

 2010 ம் ஆண்டு  பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளின் போது யாருமே எதிர்பாராத  விதமாக மு,க பாராளுமன்ற உறுப்பினர் நௌசாத் அவர்கள் ஐ.ம.சு.கூ உடன்   சேர்ந்து சம்மாந்துறை தொகுதியில் போட்டியிட முடிவெடுத்ததனால் சம்மாந்துறையில்  மு,க சார்பாக ,தே .க உடன் இணைந்து மன்சூர் அவர்களும் , மாஹிர்  அவர்களும் போட்டியிடவேண்டி நிலை ஏற்பட்டது ,

நௌசாத் அவர்களை    மீண்டும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்று சம்மாந்துறைத் தொகுதி மக்கள் 28252 வாக்குகளை ஐ.ம.சு கூ  பெற்றுக் கொடுத்தனர். மு.க, ஐ .தே கட்சியுடன் ஒன்று சேர்ந்து 10184 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது
அதிகப்படியான வாக்குகளை அம்மக்கள் அள்ளிக் கொட்டியும் நௌஸாத் அவர்களை பாராளுமன்ற அனுப்ப முடியாமலே போய்விட்டது . ஐ.ம.சு. கூ போட்யிட்ட அதாஉள்ளாஹ் அவர்கள் மாத்திரமே முஸ்லிம்கள் சார்பாக வெற்றியீட்டிக் கொண்டார். ஏனைய 3 உறுப்புரிமையும் சகோதர இனத்தவர்களுக்கே கிடைத்தது,


பாராளுமன்ற வரலாற்றில் 1956,2010 ம் ஆண்டுகளில் அமையப்பெற்ற பாராளுமன்றங்களில்தான் சம்மாந்துறை   தனது பிரதி நிதியினை      இழந்துள்ளதை அவதானிக்கலாம்.

 1994 ம் ஆண்டு   யூ.எல்,எம்,முகைதீன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற சந்தர்பத்தினைப் போல்    2008 ம் ஆண்டு    நௌசாத் அவர்களுக்கு கிடைத்தது . அவர் மு,க வில் தொடர்ந்திருப்பாரேயானால்  நடைபெற்ற தேர்தலில் சம்மாந்துறைக்கான   உறுப்புருமை முதன்மை நிலையில் உறுதிப் படுத்தப்பட்டிருக்கும்.,,,,

2004 ம் ஆண்டு  நேரடியாக தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை  பெற முடியாவிட்டாலும் அன்வர் இஸ்மாயில் அவர்கள் தனது அரசியல் செல்வாக்கினால்   பாராளுமன்ற உறுப்புரிமையினை நியமன உறுப்பினர் மூலம் பெற்று வரலாற்றில் இடம் பிடித்தார்

அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்சி மாறுகின்ற போது தொடர்ந்து பேணி வந்த பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிரிப்பதை இங்கு  கவனத்திற்க் கொள்ளவது மிக முக்கியம் .   

 இன்று  சம்மாந்துறைக்கான பாராளுமன்ற பிரதிநிதியினை பெற்றுக்  கொள்வதற்க்காக  பல கருத்துக்கள் நிலவுகின்றன

மு,க கட்சியினை நிராகரித்து மாற்று கட்சிகளை அறிமுகப் படுத்துதல்., மு,க அன்றி பெரும்பான்மை கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடல்.,  சகல அரசியல் கட்சிகளையும் நிராகரித்து சுயேட்ச்சை குழுவாக ஊரின் முக்கிய சபைகளின் அங்கீகாரத்துடன் தேர்தலை சந்தித்தல்,,புதிய முகங்களை புதிய முஸ்லிம் இனத்துவ அணியில் இடம்பெறச் செய்து போட்டியிடல்.,,,,...  

1989 ம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில்  மு,க வினை எதிர்த்து பலர் களம் இறங்கினாலும் பாராளுமன்றம் செல்ல முடியாமலே போய் விட்டது என்பது       சம்மாந்துறைத் தேர்தல் தொகுதிக்கான வரலாறாகும். 

பெரும்பான்மை கட்சிகளுடன் நேரடியாக ஒருவர் அங்கு தேர்தலை சந்தித்தல் என்ற  கருத்துக்கூட விகிதாசர பிரதிநிதித்துவ தேர்தலில் அதற்க்கான வாய்ப்பு குறைவே

1989 ம் ,2010 ம் ஆண்டின் தேர்தல்களில் ஐ,தே,.ஐ ம சு கூ   மூலமும்  நௌசாத் அவர்கள்  போட்யிட்டு வெற்றி பெற முடியாமல் போனதையும்.குறிப்பாக 2010 ம் ஆண்டு ஐ. ம. சு. கூ .கட்சிக்கு   28252 வாக்குகளை பெற்றுக் கொடுத்த பொழுதிலும் பாராளுமன்ற கனவு பறிக்கப்பட்டதையும்   குறிப்பிடலாம்.
இவ்விரு தேர்தல்களிலும் நௌசாத் அவர்களை நன்றாக  இரு கட்சிகளும்  பயன்படுதித்தி   6 சகோதர இனத்தவர்கள் பாராளுமன்றம் செல்வதற்க்கான வாய்ப்பினை பெற்றுக்கொண்டன
சுயேட்ச்சை  குழுவாக  சகல தாரப்பாரும்  இணைந்து  "சம்மாந்துறைக்கான  பிரதிநிதித்துவத்தினை பாதுகாத்தல்"" என்ற தொணிப்பொருளில் களம் காணல் இதற்க்காக அனைத்து தரப்பாரின் ஒப்புதலையும் பெற்றுக் கொள்ளல் என்ற கருத்துக்  கூட எந்தளவு சாத்தியம் என்பதை                      வரலாற்றில் இருந்தே படிப்பினை பெறவேண்டியுள்ளது.

இந்த சுயேட்ச்சை அணி சம்மாந்துறை தொகுதிக்கு சரிவருமா 

சுயேட்ச்சை அணியினை நிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் கூட சம்மாந்துறை  தொகுதிக்கு உண்டு.12 வது பாராளுமன்றத்தில் நௌஸாத் அவர்களின் தலைமையில் தற்ப்போதய பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களுடன் இணைந்து முயல் சின்னத்தில் போட்யிட்டு முழு மாவட்டத்திலும் 14808 வாக்குகளை பெற்றதுடன் சம்மாந்துறை தொகுதியில் 8275 வாக்குகளை பெற்றும்  அவரால் வெற்றி கொள்ள முடியவே இல்லை (தற்ப்போது கை விடப்பட்டுள்ளதாக தகவல்).

இத்தேர்தலில் சம்மாந்துறையில் அன்வர் இஸ்மாயில் அவர்கள் வெற்றி ஈட்டியதுடன் மு. க 3 உறுப்பினர்களை பெற்றுக் கொண்டமையினை மீட்டிப்பார்க்க வேண்டியுள்ளது.

இந்த செய்தி சுயேட்ச்சை மூலம் அணி சேர்ந்து போட்டியிடுவதால் அரசியல் கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்பதாயே காட்டுகின்றது

புதிய முகங்களை  புதிய முஸ்லிம் இனத்துவ அணியில்  களம் இறக்கினால் கூட அம்மக்கள் இலகுவில் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.ஏனெனில் அங்கு அப்துல் மஜீத் அவர்களுக்கான  ஆதரவுத் தளமும் , மு,க கட்சியின் செல்வாக்கும் பெருமளவு தாக்கம்  செலுத்துவதே காரணம் எனலாம்.

முஸ்லிம் இனத்துவ அடையாளத்துடன் இம்முறை அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட இருக்கும் அரசியல் கட்சிகள் கூட புதியவர்களை  அணி சேர்த்து  போட்டியிட்டாலும்  அவர்களால் வாக்குகளின் சம நிலையினை பாதிக்கச்  செய்ய முடியுமே  தவிர வெற்றிக் கனியினை ருசிப்பது கேள்விக் குறியே.

சம்மாந்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை பெறவேண்டும் என்றால்   அவர்கள் எவ்வாறான முடிவினை எடுப்பதன் மூலம் வெற்றியினை உறுதிப் படுதித்திக் கொள்ளலாம்    என்ற கேள்வி எல்லா தரப்பாலும் எழுப்பப்படுகின்றது..

மு.கா, அப்துல் மஜீத் அவர்களுக்கான ஆதரவுத் தளமும் அதன் பின்னணியும் ,ஏனைய கட்சிகள்  என மூன்று பிரிவாக அங்குள்ள அரசியல் கள நிலைவரங்களை  காண முடிகின்றது. இதில் மு,க விற்கும்,ப்துல் மஜீத் அவர்களுக்கான ஆதரவுத் தளத்‌திற்குமிடையே  கூடுதலான போட்டி அடிக்கடி நிலவுவதை அவதானிக்க முடிகின்றது.

அப்துல் மஜீத் அவர்களுக்கான    அரசியல் ஆதரவாளர்கள்   ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து மு.க வினை எதிர்த்து நின்ற போது அது தேர்தலில் வெற்றி பெறாத நிலையினையும்2001  ம் ஆண்டு  அவ்வாதரவு அணி  தனித்து நின்ற பொழுது வெற்றி கொள்ள முடியாமையும்  அதன் போது மு,க வெற்றி பெற்றதையும் உதாரணமாகக் கூறலாம். 

2004 ம் ஆண்டு  அப்துல் மஜீத் அவர்களுக்கான ஆதாரவாளர்களும்  மு, ,வும் சேர்ந்து பொதுத் தேர்தலை சந்தித்த பொழுது அன்வர் இஸ்மாயில் அவர்களின் வெளியேற்றம் வெற்றிக்கு தடையாக அமைந்ததையும் வரலாற்றில் படிப்பினையாகக் கொள்ள வேண்டியுள்ளது..

ஏனைய கட்சிகள்  எதிர்த்து நின்ற பொழுதிலும்  அவர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்குகளால் அவர்களை சார்ந்து நிற்ப்பவர்களின் வெற்றிக்கு  வாய்ப்பாகவே  இருந்திருக்கிறது...,

இறுதியாக நடைபெற்ற மூன்று வகையான தேர்தல்களின் பெறுபேறுகளை  மீட்டிப் பார்ப்பதன் மூலம் வெற்றிக்கான கட்சியினைப் பற்றி அவர்களால் சிந்திக்க முடியும்.

இங்கு போட்டி நிலவுகின்ற மு, வினையும்,அப்துல் மஜீத் அவர்களின் ஆதரவாளர்களை  தலைமை தாங்கும் நௌசாத் அவர்களின்    அரசியல் நடவடிக்கைகளயுமே  ஆய்வுப் பொருளாக கொள்ள வேண்டியுள்ளது

 2004,2010 கால  பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் கட்சி ரீதியாக  மு,க தோல்வியை தழுவி உள்ள அதே வேளை.2010 ம் ஆண்டின் தேர்தலில் நௌசாத் அவர்களின்    அணி  கூடுதலான வாக்குகளைப் பெற்றும் வெற்றி பெற முடியவில்லை. 
2011 ம் ஆண்டு நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் நௌசாத் அவர்களின்   அணி   12358 வாக்குகளையும்,மு,க 10078 வாக்குகளையும் பெற்றுக் கொண்டன. மு,க வினால் பிரதேச சபையினை கைப்பற்ற  முடியா விட்டாலும் 10000 வாக்குகளைப் பெற்று சம்மாந்துறைப் பிரதேசத்தில் தனக்கான ஆதரவுத் தளத்தினை தக்கவைத்துக் கொண்டது..

2012 ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் மு,க 25611 வாக்குகளையும்,நௌசாத் அவர்களின்   அணி மற்றும் தே கா உடன் இணைந்து  களம் இறங்கிய ஐ.ம.சு. கூ  12610 வாக்குகளையே பெற்றுக் கொண்டது.

இம்மூன்று தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் தேர்தல் கள நிலைவரத்தினை அவதானிக்க முடியும்,

மேலும் கடைசியாக நடைபெற்ற இரு பாராளுமன்ற தேர்தல்களிலும் மு. க ஆட்சியிலுள்ள அரசாங்கத்தினை எதிர்த்தே போட்டியிட்டது.அதனால் அதன் தோல்வியில்  ஆளும் கட்சி தாக்கம் செலுத்தியது.

மகாண சபை தேர்தலின் போது இன ரீதியான செயற்பாடுகளை  ஆட்சியாளர்கள் கட்டுப் படுத்த தவறியாதனால்    மு,க வினையே மக்கள் ஆதரித்து நின்றனர்.,,,,,,
மாகாண சபைத் தேர்தலில் கூடுதலாக மக்கள்  மு,க கட்சிக்கு ஆதரவு அளித்தாலும்  பிரதேச சபைத்தேர்தலில் நௌசாத் அவர்களின்   அணி    பெற்ற   வாக்கின் சமநிலை பாதுகாக்கப் பட்டிருக்கின்றது.

 மு,க தற்ப்போதய நிலையில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளில் ஒன்றாகவும்  பிரதமர் தலைமையில் உள்ள ஆளும் கட்ச்சியின் அன்பை பெற்றதாகவும் தனது அரசியல் இருப்பினை தக்கவைத்துள்ளது. 

இந்நிலையில்  சம்மாந்துறை  தொகுதியில் மு,க உட்கட்சி முரண்பாட்டினால்  பிளவு படாத நிலையில் நௌசாத் அவர்களின்   அணி   சம்மாந்துறை தொகுதியினதும் மற்றும் அக்கிராமத்தின்  அபிவிருத்தியையும் கவனத்திற்க் கொண்டு மு.க விற்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலமாக மாவட்டத்தின் ஏனைய கிராமத்தவர்களும் சம்மாந்துறைக்கான ஆதரவினை வெளிப்படுத்த உள்ள நிலையில் சம்மாந்துறையின்   பிரதிநித்துவம் முதன்மைப்படுத்தப் பட்ட அடிப்படையில் பாதுகாக்கப்படும் இன்ஷா அல்லாஹ்........

நௌசாத் அவர்கள் இவ்வாறான முடிவினை எடுக்காது அவர் ஏனைய கட்சிகளுக்கோ அல்லது அவர்  தனித்து   போட்யிட்டாலோ  அல்லது புதிய கட்சிகளை ஆதரித்து நின்றாலோ சம்மாந்துறையின் வெற்றி கேள்விக் குறியாகிவிடும்;

வரலாற்றிலிரிந்து படிப்பினை பெற்று இம்முறை சிறந்த முடிவனை சம்மாந்துறை தொகுதி மக்கள் எடுத்து தான் இழந்த பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை மீளப் பெற முயற்சிப்பார்கள்.... 




Post a Comment

0 Comments