மனித படுகொலை ஒன்றுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவிற்கு (சோகா மல்லி) இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளது.
வெலிகடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர் கடந்த 9ஆம் திகதி வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் சாந்த தொடகொட என்பவர் மீது தப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ததாக முன்னாள் பிரதியமைச்சர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவருடன் மேலும் இருவர் மீதும் இதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மூவரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஆறு மாத காலமாக முன்னாள் பிரதியமைச்சர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், நிவிதிகல தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக இருக்கும் பிரேமலால் ஜயசேகரவின் தேர்தல் பிரசாரப் பணிகள் நேற்று (12) அந்தப் பிரதேசத்தில் அவர்களின் ஆதரவாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
tamil.srilankamirror.com

0 Comments