Ticker

6/recent/ticker-posts

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய விவகாரம்; மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிக்கலாம்: சம்பிக்க ரணவக்க

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிக்கலாம். அதற்கு சட்டத்தில் இடமுண்டு என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 6வது திருத்தத்தின் பிரகாரம் நாட்டுக்குள் தனியான இராஜ்ஜியம் ஒன்றை உருவாக்க நிதி உதவி வழங்கும் நபரின் குடியுரிமை 7 வருடங்களுக்கு இரத்துச் செய்யப்படுவதோடு, சொத்துக்கள் யாவும் அரசுடமையாக்கப்படும். இந்த நிலை மஹிந்த ராஜபக்ஷவுக்கும், டிரான் அலஸக்கும் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலத்தில் புலிகளுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டை இதுவரை நிராகரிக்கவில்லை என்று குறிப்பிட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராடா நிறுவனத்தினூடாக புலிகளுக்கு 169 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புலிகளுக்கு நிதி வழங்கிய சம்பவம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ குற்றவாளி. இந்த கொடுக்கல் வாங்கலை டிரான் அலஸ் சத்தியக் கடதாசி மூலம் ஏற்றுக்கொண்டுள்ளார். புலிகளுக்கு நிதி வழங்கியது குறித்த சகல ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றது. முடிந்தால் என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷவை அழைக்கிறேன்.
2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றது. புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வடக்கில் தேர்தலை பகிஷ்கரிக்க நடவடிக்கை எடுக்குமாறு டிரான் அலஸிடன் மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்தார். அந்த சமயம் டிரான் அலஸ், சீ. ரீ. பீ. எனும் நிறுவனத்தை நடத்தி வந்ததோடு அதனூடாக வடக்கு கிழக்கில் உள்ள தொலைபேசி நிறுவனங்களுடன் பணியாற்றி வந்தார்.
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த டிரான் அலஸ், தான் பஷில் ராஜபக்ஷ மற்றும் புலி பிரதிநிதி எமில் காந்தன் ஆகியோருடன் பேச்சு நடத்தியதாக சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு நிதி வழங்கியதாகவும் அதன் மூலம் புலிகள் படகுகளை கொள்வனவு செய்ததாகவும் டிரான் கூறியிருக்கிறார். டிரான் அலஸின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து இவை அனைத்தையும் அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.
புலிகளுடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வீடியோ மற்றும் தகவல்கள் தன்னிடம் இருப்பதால் அவற்றை நாசப்படுத்துவதற்காகவே தனது வீட்டை கொள்ளையடித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரபாகரனுடன் நேரடி பேச்சு நடத்துவதாகவே 2005ல் மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2005 டிசம்பர் 27 ஆம் திகதி நடத்த மாவீரர் தின நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ யதார்த்தமான தலைவர் என பிரபாகரன் கூறியிருந்ததோடு, பிரபாகரனை மஹிந்த ராஜபக்ஷ மிஸ்டர் பிரபாகரன் என்றே அழைத்தார். இதன் மூலம் மஹிந்தவின் இரட்டை வேடம் புலனாகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தனக்குக் கீழுள்ள அமைச்சின் கீழ் ராடா நிறுவனத்தை உருவாக்கினார். ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கிய ரெப்லா (Reppla) டப்ரன் (Tafren) டபோர் (Tafor) ஆகிய நிறுவனங்களை இணைத்து அமைக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பணிப்பாளராக டிரான் அலஸ் நியமிக்கப்பட்டார். பீ.அபேகுணவர்தன, திலக் அமுனுகம, சாந்தி பெர்ணாந்து, சாலிய விக்ரமசூரிய ஆகியோர் இதில் தொடர்புபட்டிருந்தனர். ராடா நிறுவனத்திற்கு தேசிய சேமிப்பு வங்கி அபிவிருத்தி அமைச்சு என்பவற்றினூடாக நிதி உதவி வழங்கப்பட்டது.
2005 இல் இவர்கள் கிளிநொச்சிக்குச் சென்று பூவண்ணான் எனும் புலிகளின் தலைவருடன் 1200 சுனாமி வீடுகள் கட்டும் திட்டம் குறித்து பேச்சு நடத்தியுள்ளனர். புலிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட போலி திட்டமே இது. இந்த திட்டத்திற்கு 800 மில்லியன் மதிப்பிடப்பட்டது. ஆனால் இதனை சட்டபூர்வமாக வழங்க முடியாது எனவும் அமைச்சரவை அனுமதி தேவை எனவும் திறைசேரி அதிகாரி கூறியுள்ளார்.
இதனால் அமைச்சரவைக்கு இந்த திட்டம் குறித்து அறிவித்து விட்டு இந்த வீடமைப்பு திட்டத்திற்கு 800 மில்லியன் ரூபாவை ஒதுக்க நிதி அமைச்சராக மஹிந்த நடவடிக்கை எடுத்தார். இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை.
ஜீ. எல். பில்டர்ஸ் என்ட் கன்ஸ்ட்ரக்சன் சீ. என். கே. ஹோல்டிங்ஸ், எவரெஸ்ட் சிவில் இன்ஜினியர் பிரைவட் லிமிடட் ஆகிய 3 நிறுவனங்களினூடாக 800 மில்லியன் ரூபா பணம் பகுதி பகுதியாக வழங்கப்பட்டுள்ளது இந்த நிறுவனங்கள் பெயரளவில் மட்டுமே உள்ளவையாகும்.
2006 இல் மாவில்ஆறு விவகாரம் ஆரம்பமானாலும் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்ந்து இடம்பெற்றது. 2006.06.22 ஆம் திகதி பீ. கே. ஹோல்டிங்ஸ் கணக்கிலிருந்து 100 மில்லியன் ரூபா டிரான் அலஸின் சீ. ரீ. பி. அலுவலகத்தில் வைத்து டிரான் அலஸூக்கு வழங்கப் பட்டது. 2006 மே 10 ஆம் திகதி பீ. கே. ஹோல்டிங் கணக்கிலிருந்து 5700,000 ரூபா வழங்கப்பட்டது. மே 30 ஆம் திகதி எவரெஸ்ட் சிவில் இன்ஜினியரிங் சர்விஸ் கணக்கினூடாக 100 இலட்சம் ரூபா பெற்று எமில் சாந்தனுடன் சென்று சீ. ரீ. பி. அலுவலகத்தில் வைத்து டிரான் அலஸூக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
2006 மே 31 ஆம் திகதி எவரெஸ்ட் சிவில் இன்ஜினியர்ஸ் கணக்கில் இருந்து 100 இலட்சம் ரூபா பணம் டிரான் அலஸ¤க்கு வழங்கப்பட்டது. திறைசேரியினூடாக விநியோகிக்கப்பட்ட 169 மில்லியன் ரூபா பணம் ராடா நிறுவனத்தின் மூலம் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவது உகந்ததல்ல. 26 ஆயிரம் படையினரையும் 9 ஆயிரம் பொதுமக்களையும் கொன்ற புலிகளுக்கு நிதி உதவி வழங்கியவர்கள் இன்று மனித உரிமை குறித்து பேசுகின்றனர்.
இலங்கைக்குள் தனியான ராஜ்ஜியம் அமைக்க உதவி வழங்குதல் அதற்கு உதவுதல், நிதி உதவி வழங்குதல் என்பவற்றுடன் தொடர்புள்ள எத்தகைய நபருக்கும் எதிராக அரசியலமைப்பின் பிரகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விசாரணையின் பின்னர் 7 வருடங்கள் பிரஜா உரிமையை ரத்துச் செய்ய முடியும். அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கப்படும். எம்.பியாக இருந்தால் அவரின் பதவிகள் இரத்தாகும்.” என்றுள்ளார்.

Post a Comment

0 Comments