இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சவை எதிர்த்து, வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவருமான சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருடன் நமது சிறப்பு செய்தியாளர் தங்கவேல் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்.
கேள்வி: வடக்கு கிழக்கு மாகாணங்களை விடுத்து குருனாகல் மாவட்டத்தில் ராஜபக்சவை எதிர்த்து நீங்கள் போட்டியிடுவதற்கு என்ன காரணம்? தோற்கடிக்கப்டுவீர்கள் என்று தெரிந்தே போட்டியிடுகிறீர்களா?
நான்கு கட்சிகள் இருக்கக்கூடிய தமிழ்தேசிய கூட்டமைப்பிலே, நான் சார்ந்திருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் டெலோவின் சார்பிலே யாழ்ப்பாணம் மாவட்டத்தில், ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ருந்தது. எங்கள் கட்சியின் வழக்கறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகாந்தா அவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
அவருக்கு அந்த தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு தேர்தலில் போட்டியிடாமல் இருக்காமல் என்று தீர்மானித்திருந்த நேரத்திலேதான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போகிறார் என்று தெரிந்தவுடன், அவர் எங்கு போட்டியிட்டாலும், அவர் சொந்த மாவட்டமான அம்மாந்தோட்டையாக இருக்கலாம், ரத்னபுரியாக இருக்கலாம். குருனாகல் மாவட்டமாக இருக்கலாம். அவரை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்து, என்னுடைய தலைமையிலே 18 பேர் அடங்கிய குழுவாக சுயேட்சையாக நாங்கள் களம் இறங்கியிருக்கிறோம்.
கேள்வி: குழுவாக நீங்கள் களம் இறங்கினால் கூட நீங்கள் சாதிக்கப்போவது என்ன?
தேர்தல் விடயம் என்று பார்த்தால் குருனாகல் மாவட்டத்தில் சுமார் 12லட்சம் மக்கள், 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். தமிழ் மக்களில் குறிப்பாக மலையத் தமிழ்மக்கள் சுமார் 35 ஆயிரம் பேர் வாழ்கிறார்கள். மொத்த விழுக்காட்டிலே இரண்டு வீதம் வரும். அதுபோல தமிழ் பேசும் முஸ்லீம்கள் சுமார் 7சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆகவே அங்கு வெற்றி வாய்ப்பு என்பது அறவே இல்லை என்று தெரிந்தும், எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, ஒரு லட்சம் தமிழ்மக்களை படுகொலை செய்த அந்த போர் குற்றவாளி முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்ப்பை காட்டவும், இன்னால் ஜனாதிபதி அவரை அனுமதித்தற்காக அவரும் போர் குற்றவாளி தான்.
அவருக்கு மாத்திரமல்ல, பிரதமருக்கும் எதிர்ப்பு காட்டதான் போட்டியிகிறேன். 62லட்சம் மக்கள் மஹிந்த ராஜபட்சவை வீட்டுக்கு அனுப்ப வாக்களித்திருந்தனர். அதில் லட்சக்கணக்கான தமிழ் வாக்குகளும் அடங்கும். அதிலே எதிர்பார்த்த விடயங்களை இவர்கள் நிறைவேற்ற தவறிவிட்டனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் மக்களின் இனப்பிரச்னையை தீர்க்க தவறிவிட்டது.
3 கோரிக்களையும் வைத்தோம். ஒன்று அரசியல் கைதிகள் 275 பேர் விடுவிக்கப்படவில்லை; இரண்டாவதாக, சரணடைந்த 6 ஆயிரம் மற்றும், காணாமல் போன 12 ஆயிரம் உள்பட 18,000 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. வடக்குகிழக்கு மாகாணத்தில் 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அரச படைகளினால் கட்டாய ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அவற்றில் 3ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தான் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலைமைகளை உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் கொண்டுவரும் முகமாகத்தான் இதையொறு களமாக பயன்படுத்த தீர்மானித்திருக்கிறோம்.

0 Comments