அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும், 2002 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜிம்மி கார்ட்டர் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
90 வயதாகும் ஜிம்மி கார்ட்டெர் தனக்குப் புற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அது உடலின் ஏனைய பாகங்களுக்கும் பரவியிருப்பதாகவும் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த மாதத் தொடக்கத்தின் போது அவரது கல்லீரலில் இருந்து சிறிய பகுதி ஒன்று புற்று நோய் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் பட்டதாகவும் தெரிய வருகின்றது. ஆனால் தற்போது புற்று நோயானது ஜிம்மி கார்ட்டரின் எப்பகுதியைத் தாக்கியுள்ளது மற்றும் எங்கெங்கு பரவியுள்ளது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. ஆனால் கார்ட்டெரின் குடும்பத்தில் பலர் கணையப் புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்கள் என்பதுடன் புற்று நோய் காரணமாகத் தான் கார்ட்டெரின் தந்தை, சகோதரர் மற்றும் இரு சகோதரிகள் ஆகியோர் இறந்துள்ளனர். கார்ட்டெரின் தாயார் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கார்ட்டெரின் வாழ் நாளானது இரு விடயங்களில் தங்கியிருப்பதாகவும், அவை புற்று நோயால் ஏற்பட்டுள்ள கட்டி எவ்வளவு பெரிது மற்றும் புற்று நோய் உடலின் ஏனைய பாகங்களுக்கு எந்தளவு பரவியுள்ளது என்பதைப் பொறுத்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவரது துணைவியாரான மிச்செலே ஒபாமா ஆகியோர் ஜிம்மி கார்ட்டெர் விரைவாகவும், முழுமையாகவும் குணமடையப் பிரார்த்திப்பதாக அறிக்கை விடுத்துள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கார்ட்டெருடன் அதிபர் ஒபாமா தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்ததாகவும் தெரிய வருகின்றது.
ஜிம்மி கார்ட்டெர் அதிபர் பதவியை விட்டு விலகிய பின்னர் கார்ட்டெர் நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆற்றி வரும் சேவைகளுக்காகவும் மனித உரிமை விவகாரங்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்றமைக்காகவும் அமெரிக்க மக்களின் மதிப்பைப் பெற்றவர் ஆவார். தற்போது டுவிட்டர் மூலமாக அமெரிக்காவின் முக்கிய தலைவர்களும் 2016 ஆம் ஆண்டுக்கான அதிபர் வேட்பாளர்களும் ஜிம்மி கார்ட்டெர் பூரண குணமடைய வாழ்த்துக்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4tamilmedia.com

0 Comments