ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய குற்றவாளிகளுடன் ரிழா மா்சூக் என்பவருக்கிருந்த நேரடி தொடர்பு பற்றி அறிய வேண்டுமென்றால், சிறுவா்கள், பெண்கள் உட்பட 269 அப்பாவி மக்கள் படுகொலையான, ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டுள்ள உத்தியோகபூா்வ அறிக்கையை கட்டாயம் வாசிக்க வேண்டும்.
ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் சிலர் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலை திரைமறைவில் இருந்து செயற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குறித்த “புலனாய்வு” அமைப்புகளோடு இணைந்து செயற்பட்டவா்களே இவ்வாறு சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கப்பட்டு வெளியே விடப்பட்டுள்ளனா்.
அப்போதைய சட்டமா அதிபா் தப்புல டி லிவேரா (Dappula de Livera) ஈஸ்டா் ஞாயிறு தாக்குதல் ஒரு சதிக்கோட்பாடு (conspiracy theory) என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இலங்கையின் சட்டமாஅதிபராக கடமையாற்றிய அவா், ஓய்வு பெறும் போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலின் தயவால் ஆட்சி பீடமேறி நன்மையடைந்த கடந்தகால ஆட்சியாளர்கள், சட்டத்துறைக்கு வழங்கியிருந்த அழுத்தத்தின் பிரதிபலிப்பை தப்புல டி லிவேராவின் இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தின.
சஹ்ரானோடு மிக நெருங்கி செயற்பட்ட, முக்கிய சூத்திரதாரிகள் சிலா் சகல குற்றங்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டனா். சட்டமா அதிபாின் வேண்டுகோளுக்கிணங்க இவா்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் அம்பலமானதன் பிறகு பல அழுத்தங்களும், நெருக்குதல்களும் என் மீதும் பிரயோகிக்கப்பட்டது. இது தொடா்பான ஒரு பதிவை நான் ஏற்கனவே எழுதியும் உள்ளேன்.
இனி ரிழா மா்சூக் பற்றிய விடயத்திற்கு வருவோம்.
2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி, வெடிகுண்டு ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்த போது, அது தவறுதலாக வெடித்ததன் காரணமாக படு காயமடைந்த சஹ்ரானின் சகோதரன் றிழ்வானை, கொழும்பு தேசிய மருத்துவனையில் பாதுகாப்பான முறையில் அனுமதித்து சிகிச்சை வழங்குவதற்குரிய வியூகத்தை சவுதியிலிருந்து வகுத்தவா் தான் இந்த ரிழா மா்சூக்.
ரிழாவின் நண்பனான கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடமையாற்றிய ஷப்ராஸ் என்ற மருத்துவரை பயன்படுத்தியே றிழ்வானுக்கான சிகிச்சைகள் ஏற்பாடாகின. பயங்கர காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட றிழ்வான் மீது எவ்வித பொலிஸ் விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல், மிகவும் கவனமாக காய்கள் நகர்த்தப்பட்ட விவகாரம், ஆணைக்குழு விசாரணைகளின் போது வெளிச்சத்திற்கு வந்தது.
ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னா் மாவனல்லையில் புத்தர் சிலையை உடைத்து சிங்கள, முஸ்லிம் கலவரம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருந்த, மாவனல்லை இப்றாஹிம் மௌலவியின் பிள்ளைகளான சாதிக்கும், ஷாஹிதும் காயமடைந்த றிழ்வானை கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கின்ற பொறுப்பை ஏற்றிருந்தனா்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் றிழ்வானை அனுமதிக்கும் போது, றிழ்வானின் உண்மையான பெயரை மறைத்து விட்டு, “எம். ஐ. ஷாஹித்” என்ற பெயாில், சாதிக்கே றிழ்வானை சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்.
றிழ்வான் குணமாகி வீடு சென்றதன் பின்னா், 2018ம் வருடம் டிஸம்பா் மாதத்தில் ஒரு நாள் ஸஹ்ரானும், றிழ்வானும், இந்த ரிழா மா்சூக்கும் இன்னுமொரு இனம் தொியாத நபரும் (இவா் குறித்த புலனாய்வு பிாிவின் அங்கத்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது) தெஹிவளையில் எபநெஸா் பிளேஸில் உள்ள டொக்டா் ஷப்ராஸின் வீட்டில் அவரை சந்தித்துள்ளனர்.
ரிழா மா்சூக், சஹ்ரானை டொக்டா் ஷப்ராஸுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு டொக்டா் ஷப்ராஸால் வழங்கப்பட்ட சாட்சியத்தில் நிரூபணமாகிறது.
றிழ்வானுக்கு சிகிச்சை வழங்கியதற்காக டொக்டா் ஷப்ராஸுக்கு சஹ்ரான் நன்றி கூறியதோடு, டொக்டா் ஷப்ராஸுக்கு இரண்டரை லட்சம் (250000.00) ரூபாய்களை சன்மானமாக வழங்கியதாகவும் ஈஸ்டா் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஈஸ்டா் ஞாயிறு தாக்குதல் என்ற கொடிய நிகழ்வு இடம்பெற்று ஆறு வருடங்கள் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. என்றாலும் முக்கிய சூத்திரதாரிகள் சிலா் வெளியே வந்துள்ளனா். இது ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலின் கொலைக்களத்தை சந்தித்த மக்களுக்கு இழைக்கும் மிகப்பெறும் அநீதியாகும்.
ஆட்சி மாற்றம் ஒன்றை இலக்காக வைத்து, இந்த சதிக்கோட்பாட்டை அரங்கேற்றப்படுவதற்கு பின்னணியில் நின்று உதவி புரிந்த பல சூத்திரதாரிகள், சட்டத்தின் இடைவெளிகளாலும், கடந்த கால ஆட்சியாளா்களின் அரவணைப்பாலும், அனுசரணையினாலும் அவ்வப்போது நிரபராதிகள் என்றும் சிலபோது பிணையிலும் வெளியே வந்துள்ளனா்.
2018ம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதலுக்கான கள நிலவரத்தை உருவாக்குவதற்காகவும், சஹ்ரானின் கைதை தடுக்கும் நோக்கில் கோத்தாபய மற்றும் மைத்திரிபால சிாிசேன கொலை நாடகத்தை அரங்கேற்றிய நாமல் குமார என்பவன் கூட குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்டுள்ளான். எனவே வெளியே வந்தவன் எல்லாம் நிரபராதி என்றும் அப்பாவி என்றும் நினைத்துக் கொண்டிருப்பது மிகப் பொிய தவறாகும். ஈஸ்டா் தாக்குதல் எமது சமூகத்தின் மீது தொடுத்த பயங்கரமான அவஸ்த்தைகளை மறந்த ஒருவரால் மட்டுமே இதனை இலகுவான விசயமாக பார்க்க முடியும்.
சஹ்ரானோடு அல்லது கொலையாளிகளோடு ஒருநாள் தொலைபேசியில் கதைத்த குற்றதிற்காக, சஹ்ரானின் உபதேசங்களை தனது கைப்பேசியில் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவா்கள் சிறைகளில் வாடும் போது, சஹ்ரானுக்கும் இந்த நாசகார வேலைக்கும் உறுதுணையாக இருந்தவா்கள் எப்படி வெளியே வந்தார்கள்? அப்படி வெளியே வந்துள்ள சூத்திரதாரிகளை நல்லவா்கள், தூயவா்கள் என்று எங்களால் எப்படிபார்க்க முடியும்?
2025 மே மாதம் 30ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் துய்யகொன்தா அவா்களால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்ட பயங்கரவாதத்தோடு தொடர்புடைய 217 நபர்களில் 79 வது நபராக ரிழா மா்சூக் என்பவரின் பெயரும் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது. 


Other Information: #Terrorism_related activities_and_funding_for_terrorism.
இது ஐக்கிய நாடுகள் சபையின் 4(7) விதிமுறைகளின் கீழ் இல. 45/1968 சட்டத்தின் பிரகாரம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலாகும்.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இணையத்தில் PDF வடிவில் பெற்றுக்கொள்ளலாம்.


ஈஸ்டா் தாக்குதலின் படுகொலைகளுக்கு நேரடியாக ஒத்தாசை புரிந்தவன் வெளியே வந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான். உயிா்களை பறி கொடுத்தோா் நீதி வேண்டி ஆறு வருடங்களாக அழுது, போராடிக் கொண்டிருக்கின்றனா்.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஈஸ்டா் தாக்குதலோடு நேரடி தொடர்பு வைத்திருந்த ஒரு சிலர் வெளியே விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அன்று முதல் இந்த விடுவிப்புக்கு எதிராக நான் போராடி வருகிறேன்.
ரிழா மா்சூக் ஒரு மனிதப் புனிதா் அல்ல, ஈஸ்டா் ஞாயிறு படுகொலைகளின் பின்னா் சவுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். ரிழா மா்சூக்கோடு சவுதியில் ஒரே அறையில் பதுங்கியிருந்த வவுணதீவு பொலிஸ் காவலரண் கொலையில் சம்பந்தப்பட்ட மில்ஹான் என்பவரும் அப்போது கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனா்.
2018ம் ஆண்டு மைத்தரிபால சிாிசேன, ரணிலின் ஆட்சியைக் கவிழ்த்து மஹிந்தவின் தலைமையில் ஆட்சியை அமைத்த காலப்பிரிவில், வவுணதீவு பொலிஸ் காவலரணில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோரமாக கொலை செய்யப்பட்டனா்.
இந்த கொலையின் பழியை புலிகள் மீது போட்டு, சஹ்ரானின் கொலைகார கும்பலை பாதுகாப்பதற்காக கோத்தாபயவிற்கு சார்பாக செயற்பட்ட ”புலனாய்வுப்பிரிவு” செய்த தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வவுணதீவு கொலைச் சம்பவம் தொடா்பாக தவறான தகவலை வழங்கி, பாதுகாப்புத்துறையை திசை திருப்பிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவா் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளாா்.
பொலிஸாரைக் குரூரமாக கொன்று அவா்களின் ஆயுதங்களை அபகரித்துச் சென்ற அந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியவன் தான் இந்த மில்ஹான். இவன் இப்போது சிறையில் இருக்கிறான். இந்த மில்ஹானுக்கு ரிழா மா்சூக் சவுதியில் பதுங்குவதற்கு தனது அறையில் இடம் கொடுத்திருந்தார். சவுதியிலிருந்து ரிழாவும், மில்ஹானும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனா்.
இத்தகைய படுபாதக செயலில் ஈடுபட்ட ஒருவா் வெளியே வந்து விட்டால் அவரை ஒரு தியாகி போல் போற்றும் ஒரு சிலரின் மட்டரகமான மன நிலையை என்னவென்பது? அந்த குண்டுத்தாக்குதலில் உங்களது பிள்ளையோ, உங்களது சகோதரரோ, உங்கள் மனைவியோ சிக்கியிருந்தால் இந்த பாவிகளுக்கு பூமாலை அணிந்து அழகு பார்ப்பீா்களா?
ஆட்சிமாற்றம் என்ற ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக, ஈஸ்டா் ஞாயிறு தாக்குதல் என்ற காட்டுமிராண்டித் தனத்தை அரங்கேற்றி அப்பாவி சிறுவா்கள் பெண்கள் உட்பட 269 பேரை துடிக்கத் துடிக்க கொலை செய்த, 500க்கும் அதிகமானவா்களை கடுமையாக காயப்படுத்தி முடமாக்குவதற்கு துணைபோன படுபாதகா்களை நீதியை, நோ்மையை நேசிக்கும் யாராவது மன்னிப்பார்களா?
ஈஸ்டா் தாக்குதலில் சம்பந்தப்பட்ட கொலைகார படுபாவிகள் அத்தனை பேரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் தொடா்ந்து போராட வேண்டும்.
(பாதுகாப்பு அமைச்சு 2025 மே மாதம் 30ம் திகதி வெளியிட்ட அதி விசேட வா்த்தமானியில் ரிழா மா்சூக் பற்றிய அறிவிப்பு படமாக இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)
(பாதுகாப்பு அமைச்சு 2025 மே மாதம் 30ம் திகதி வெளியிட்ட அதி விசேட வா்த்தமானியில் ரிழா மா்சூக் பற்றிய அறிவிப்பு படமாக இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)
அஸீஸ் நிஸாருத்தீன்
0 Comments