Ticker

6/recent/ticker-posts

மோசடிக்காரர்களை அரவணைக்கும் மைத்திரி..?

கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது மைத்தரிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட 'அளுத் பரபுர' அமைப்பின் கலைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இந்த சம்பவம் 29.12.2014 அன்று கும்புக்கெடே நகரத்தில் இடம்பெற்றது. வடமேல் மாகாண சபையின் அங்கத்தவரான கமல் இந்திக்க எனபவரே மைத்தரியினை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கலைஞர்களை பொலிஸாரின் முன்னிலையில் கடுமையாக தாக்கியவர்.

தற்போது குறித்த கமல் இந்திக்க என்ற நபரை ஜனாதிபதி மைத்திரி தனது கட்சியான ஸ்ரீலசு கட்சியின் ஹிரியால தொகுதியின்  அமைப்பாளராக  தெரிவு செய்து உள்ளார்.

அண்மையில் மைத்திரிக்காக அடிவாங்கிய குறித்த கலைஞர்கள் ஊடக சந்திப்பொன்றைக் கூட்டி இச்சம்பவத்தை "மைத்திரியின் வெட்கம் கெட்ட செயல் ''என்று  கடுமையாக சாடினர்.

அண்மைக்காலமாக ஜனாதிபதி மைத்தரிபால சிரிசேனவின் போக்கு வித்தியாசப்பட்டு வருவதை அவரது பேச்சிலிருந்து அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தால் பூமியின் ஆறடி நிலத்திற்கு கீழ் தான் அடக்கப்பட்டிருப்பேன் என்று கூறி வந்தாரோ அதே கட்சியை   மைத்திரி இன்று மீள்கட்டமைப்பதாக பறைசாற்றி வருகின்றார்.

தன்னை நிராகரித்த அந்த கட்சியின் ஆட்சியொன்றை விரைவில் உருவாக்க வேண்டும் என்று கூறியும் வருகிறார்.

கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிக்கு பெயர்போன, மோசடிகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட சஜின்வாஸ் குணவர்தன கூட மைத்தரியின் காலி மேதின நிகழ்வுகளில் முன்னணி செயற்பாட்டாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மைத்திரி இப்போது ஊழல் மோசடியை அழிப்பதை விட தனது ஸ்ரீலசு கட்சியை கட்டமைப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார். இதனால் மஹிந்தவிடமிருந்து பிரிந்து வரும் ஊழல் மோசடி காரர்களுக்கு தனது ஸ்ரீலசு கட்சியில் அடைக்கலம் கொடுத்தும் வருகின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலசுகட்சினர் மைத்திரிக்கு ஒரு வாக்கும் அளிக்கவில்லை. அந்தக் கட்சியினர் மைத்திரியை அழிக்க கங்கனம் கட்டிக்கொண்டிருந்தனர். ஐதேக கட்சி உட்பட ஏனைய சிறுபான்மை கட்சிகள்தான் மைத்திரிக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்ற உண்மையை மைத்திரி மறந்து வருவது வேதனைக்குரிய விடயம்.

இந்நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதியாக்கியது ஸ்ரீ.ல.சு கட்சியை சீரமைப்பதற்கு அல்ல. இந்த நாட்டை சீரமைப்பதற்கு என்ற உண்மையை மைத்திரி புரிந்து கொள்ள வேண்டும்.

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கிடைத்த கட்சியின் தலைமைப் பொறுப்பை பாதுகாப்பதை விட நாட்டை பாதுகாப்பது மற்றும் நாட்டு மக்களுக்கு கெடுத்த வாக்குறுதிகளை பாதுகாப்பதே தனது முக்கிய கடமை என்பதை மைத்திரி உணர வேண்டும்.

தனது எதிரிக்கு ஆதரவாக இருந்தால் கெட்டவன் என்றும் தனக்கு சார்பாக வந்தால் அவன்  நல்லவன்  என்றும் தனது புதிய 'பொலிசி'யை மைத்திரி அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த  பொலிஸி யை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற செய்தியை மைத்திரிக்கு சொல்ல  இன்னும் நான்கு வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

அதிகாரத்திற்கு வரும் ஆட்களின் முகங்கள் மாறலாம், ஆனால் குணங்கள் ஒன்று என்ற உண்மையைதான் குறித்த சம்பவங்கள் காட்டி நிற்கின்றன.

Post a Comment

0 Comments