Ticker

6/recent/ticker-posts

பெண்ணை 14 விநாடிகள் உற்றுப் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம்!

ஒரு பெண்ணை தொடர்ந்து 14 விநாடிகள் உற்றுப் பார்த்தால் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என கேரள மாநில கலால் வரித்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் உள்ள கொச்சி நகரில் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலால் வரித்துறை ஆணையரான ரிஷிராஜ் சிங் நேற்று பங்கேற்று பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.

அப்போது, ‘நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது கவலை தருகிறது. நாட்டில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.
ஒரு பெண்ணை தொடர்ந்து 14 விநாடிகள் முறைத்து பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்பது நாட்டில் பலருக்கும் தெரியவில்லை.
பெண்கள் பற்றி தகாத முறையில் பேசுவது அநாகரீகமாக பேசுவது உள்ளிட்டவற்றை பெண்கள் பொறுத்துக்கொள்ளக் கூடாது. இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள பெண்கள் சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்’ என ஆணையர் பேசியுள்ளார்.
எனினும், ஆணையரின் இந்த பேச்சு ஆண்கள் மத்தியில் ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. இது குறித்து இணையத்தளவாசிகள் கருத்து தெரிவித்தபோது, ‘ஒரு பெண்ணை 13 விநாடிகள் மட்டும் தொடர்ந்து பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு மீண்டும் 13 விநாடிகள் பார்த்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பெண்ணை பார்க்கும் ஒரு ஆண் கண்ணாடி அணிந்திருந்தால் அவர் எவ்வளவு நேரம் பார்க்கிறார் என எப்படி நிரூபிக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆணையரின் இந்த கருத்து குறித்து சட்ட வல்லுநரான உதயபானு என்பவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஒரு பெண்ணை வெறுமனே பார்த்தால் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இல்லை.
பெண்களை தகாத வார்த்தைகளில் திட்டினால் அல்லது அவர்களை கண்ணியக்குறைவாக நடத்தினால் மட்டுமே அவர் மீது வழக்கு பதிவு செய்ய இந்தியச் சட்டத்தில் இடம் உள்ளது’ என உதயபானு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments