இந்தியா: கீரமங்கலம், கொத்தமங்கலம் கடைவீதியில் நேற்று 3 குழந்தைகளுக்கு நெருப்பு சூடு வைத்து அழ வைத்து பிச்சை எடுக்க விரட்டிய பெற்றோரை பொதுமக்கள் பிடித்த போது தப்பி ஓடினார்கள்.
பிச்சை எடுத்த குழந்தைகள்: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கடைவீதியில் நேற்று மதியம் சிறுவன் சிறுமி 2 பேர் அழுது கொண்டே தட்டு ஏந்தி பசிக்கிறது பிச்சை போடுங்கள் என்று கடை கடையாக சென்று பிச்சை எடுத்தனர்.
அந்த சிறுவர்கள் இருவரும் நடக்க முடியாமல் தடுமாறி நடந்து வந்தனர். அதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் அந்த சிறுவர்களை நிறுத்தி விசாரித்த போது அந்த சிறுவர்களின் கால்களில் நெருப்பால் சுடப்பட்ட பல காயங்கள் இருந்தது. பெற்றோர்கள் இரவில் சூடு வைப்பார்கள். பகலில் பிச்சை எடுக்க வேண்டும் என்று அந்த சிறுவர் சிறுமிகள் கூறினார்கள்.
இரவில் சூடு: மேலும் அந்தக் குழந்தைகள் கூறும் போது எங்கள் பெற்றோர் இரவில் எங்கள் கால்களில் நெருப்பில் கம்பியை காய வைத்து சூடு வைப்பார்கள். வலி தாங்காமல் அழுதாலும் விடமாட்டார்கள். மறு நாள் அந்த வலியோடு கடைக்கு கடை சென்று அழுது கொண்டே பிச்சை எடுக்க வேண்டும். அதே போல இன்னொரு கைக்குழந்தையும் உள்ளது. அந்தக் குழந்தையை எங்க அம்மா கையில் வைத்துக் கிள்ளி அழ வைத்து பிச்சை எடுப்பார். எல்லாரும் பிச்சை எடுத்து சேகரித்த பணத்தில் இரவில் அப்பா, அம்மா சாராயம் வாங்கி குடிப்பார்கள் என்று அழுது கொண்டே கூறினார்கள்.
விரட்டிய பொதுமக்கள்: சிறுவன் சிறுமிகள் பொதுமக்களிடம் கூறிய பிறகு அங்கு வந்த அந்த குழந்தைகளின் பெற்றோர் என்று கூறிக் கொண்டு வந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் குழந்கைள் எங்களிடம் கொடுங்கள் என்று கேட்டனர். அந்த நேரத்தில் சூடு வைத்து பிச்சை எடுக்க வைத்தது பற்றி பொதுமக்கள் கேட்டும் எந்த பதிலும் சொல்லாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.
இந்த கும்பல் வெளியூரில் இருந்து கொத்தமங்கலம் கடைவீதி அருகே வந்து தங்கி இருந்து பிச்சை எடுக்கிறார்கள் என்றனர் பொதுமக்கள். மேலும் இது போல குழந்தைகளை சூடு வைத்து பிச்சை எடுக்க வைக்கும் பெரியவர்களை பிடித்து நடவடிக்கை எடுப்பதுடன் குழந்தைகளை காப்பகங்களில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
0 Comments