Ticker

6/recent/ticker-posts

'பதுரியன்ஸ் பாஷ் 2018' - மாபெரும் உதைபந்தாட்ட போட்டி

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Baduriyan's Bash 2018 - Inter Batch Futsal Tournament) நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடந்த இரு தினங்களாக (சனி 15.12.2018, ஞாயிறு 16.12.2018) நடாத்தப்பட்ட இந்த புட்சல் போட்டியானது மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. 

பதுரியா மத்திய கல்லூரி மைதானத்தில் இனிதே நிறைவு பெற்ற இந்த போட்டியை கண்டுகளிக்க நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகான அணைத்து பழைய மாணவர்களினதும் சிறந்த ஒன்று கூடுதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. 

லீக் முறையில் நடந்த இந்த புட்சல் தொடரில் 33 அணிகள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியானது 25 வயதுக்கு கீழ், 25 முதல் 35 வயதெல்லையினர், 35 வயதுக்கு மேல் என்ற அடிப்படையில் இடம்பெற்றது. இதில் மூன்று குழுக்களிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன்ஸ், ரன்னர்ஸ்-அப் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதில் 25 வயதுக்கு கீழ் பிரிவில் "குழு 84" அணி சாம்பியன் ஆகவும் "குழு 87" அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் கோப்பையை வென்றனர். 25 முதல் 35 வயது வரை பிரிவில் "குழு 78" அணி சாம்பியன் ஆகவும் "குழு 80" அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் கிண்ணங்களை சுவீகரித்தனர். 35 வயதுக்கு மேல் பிரிவில் "ஓர்கிட் அணி" சாம்பியன் ஆகவும் "குழு 64" அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் வெற்றி பெற்று நிகழ்வை அலங்கரித்தனர்.

இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முறையே, திரு. நப்ரின் தாஹிர் (25 வயதுக்கு கீழ் பிரிவில்), திரு. சப்ராஸ் (25 முதல் 35 வயது வரை பிரிவில்), திரு. அஸ்மி ரஷீத் (35 வயதுக்கு மேல் பிரிவில்) சிறந்த வீரர்களாக தெரிவுசெய்யப்பட்டு பதக்கங்களை வென்றனர்.  

மாவனல்லை உதைபந்தாட்ட வரலாற்றில் தலை சிறந்த வீரர்களை உருவாக்கிய பதுரியா மத்திய கல்லூரி இந்த நிகழ்வின் மூலம் உதைபந்தாட்டத்தில் தனது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. கல்வி மற்றும் இணைபாடவிதான செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் இந்த பாடசாலையானது இந்த நிகழ்வை தனக்கே உரிய சிறப்பம்சங்களுடன் வெற்றிகரமாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

சுமார் 3,000 மாணவர்களைக் கொண்ட பதுரியா மத்திய கல்லூரி, சபரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் தரவரிசையில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல பெருமைகளை கொண்ட இந்த பாடசாலை முதல் முறையாக நடத்திய இந்த  நிகழ்வு கல்லூரியின் வரலாற்றில் முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது. கடந்த 8 டிசம்பர் 2018 ஆம் திகதி இந்த விழாவின் மாபெரும் துவக்க நிகழ்வு நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

- ஷம்ரான் நவாஸ் (துபாய்) -

Post a Comment

0 Comments