ஈக்குவடோர் நாட்டின் கொரோனா வைரஸ் பரவலின் மையப்பகுதியான குவாயாகுயில் Guayaquil நகரில் உள்ள வீடுகளில் இருந்து சமீபத்திய வாரங்களில் கிட்டத்தட்ட 800 சடலங்களை பொலிசார் அகற்றியதாக ஈக்குவடோர் தெரிவித்துள்ளது.
ஈக்குவடோர் துறைமுக நகரத்தில் உள்ள மருத்துவமனைகள், அவசரப் பிரிவுகள், மரணச்சடங்கு செய்யும் நிறுவனங்கள் மற்றும் சவச்சாலைகள் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா மரணங்களை சவச்சாலை தொழிலாளர்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இப்பகுதி குடியிருப்பாளர்கள் வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் உடல்களைக் காட்டும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் வீடுகளில் இறந்து கிடந்த 700க்கும் அதிகமான உடல்களை தாம் மீட்டதாக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா விஷேட செயலணியின் தலைவர் ஜோர்ஜ் வேடட் கூறியுள்ளார். இந்த படையணி ஈக்குவடோர் நாட்டின் பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா விஷேட செயலணியின் தலைவர் ஜோர்ஜ் வேடட் ஞாயிற்றுக்கிழமை தனது டுவிட்டர் பதிவில், கடந்த மூன்று வாரங்களாக வீடுகளில் இருந்து 771 சடலங்களையும், மேலும் 631 உடல்களை மருத்துவமனைகளிலிருந்தும் மீட்டுள்ளதாக பதிவிட்டுள்ளதோடு அவர்களில் 600 பேரின் சடலங்கள் அதிகாரிகளால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 29 அன்று முதல் கொரோனா நோயறிதல் உறுதி செய்யப்பட்டதிலிருந்து ஈக்வடார் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 7,500 பேர் பதிவாகியுள்ளனர்.
கடலோர மாகாணமான குயாஸ் நகரில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, தலைநகர் குயாகுயிலில் 4,000 பேர் பாதிக்கபட்டு உள்ளதாகவும் ஈக்குவடோர் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அல்ஜஸீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments