Ticker

6/recent/ticker-posts

ஜார்க்கண்டில் தனிப் பெரும்பான்மை நோக்கி பாஜக

ஜார்க்கண்டில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப் பெரும்பான்மையை நோக்கி பாஜக முன்னேறி வருகிறது.
5 கட்டங்களாக நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 

வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி, பாஜக 32 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 

ஜார்க்கண்டில் 81 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 111 பெண்கள் உட்பட 1,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இப்போதைய முதல்வர் ஹேமந்த் சோரன் (தும்கா/பர்ஹைத்) முன்னாள் முதல்வர்கள் அர்ஜுன் முண்டா, மது கோடா, பாபுலால் மராண்டி, சபாநாயகர் ஷஷாங்க் சேகர் பொக்தா ஆகியோர் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 

பாஜக, சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை தனித்தனியாகவும் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்தும் போட்டியிட்டுள்ளன. 

மாநிலம் முழுவதும் உள்ள 24 மையங்களில் காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். 

கடந்த 2000-ம் ஆண்டில் பிஹார் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் புதிய மாநிலம் உருவானது. 2005, 2009-ல் நடைபெற்ற இரண்டு பேரவைத் தேர்தல்களிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

இதனால், கடந்த 14 ஆண்டுகளில் 9 முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 5 பேர் முதல்வர் பதவி வகித்துள்ளனர். 3 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

எனவே மூன்றாவது முறையாக நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலிலாவது எந்தக் கட்சியாவது அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இதற்கிடையே பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments