காத்தான்குடியில் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் காத்தான்குடி நகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் இருப்பதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை காத்தான்குடி கடாபி ரெஸ்ட் இன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிப்லி பாறூக் மேற்கண்டவாறு கூறினார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியோரினால் இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘தேர்தல் வன்முறைகளுக்கு எதிரான ஒருமித்த குரல்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சிப்லி பாறூக்-
‘நாங்கள் அரசிலிருந்து வெளியேறியவுடன் தொலைபேசி மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமாகவும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பின்னர் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது. எமது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு 24 மணி நேரத்தில் இங்குள்ள பிரதியமைச்சர் ஒருவர் எமது ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியுள்ளார். அவரது அச்சுறுத்தல் வந்து 24 மணிநேரத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிக மோசமான ஒரு வன்முறைச் சம்பவத்தை நடத்தியுள்ளார்.
எதிரணியினரால் காத்தான்குடியில் ஒரு கூட்டத்தை கூட நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக ஒரு இடத்தைக் கண்டு அந்த இடத்திற்காக விண்ணப்பித்திருந்தால் அந்த இடம் ஏற்கனவே வேறு ஒரு கூட்டத்திற்காக அனுமதி எடுக்கப்பட்டு விட்டது என்று கூறுவார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மைத்திரிபால சிறிசேனாவின் கூட்டமொன்றை தனிப்பட்ட ஒருவரின் காணியில் ஏற்பாடு செய்து நடாத்திக்கொண்டிருந்தோம். அதன் போது காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சியாத் என்பவரின் தலைமையில் 15 பேர் அங்கு வந்து எமது கூட்டத்தை குழப்புவதற்கு முயற்சித்துள்ளனர். என்றாலும் மக்கள் திரள் அங்கு அதிகமாக இருந்ததால் அவர்களால் கூட்டத்தினை குழப்ப முடியவில்லை.
இதனையடுத்து காத்தான்குடி பிரதான வீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை தாக்கி உடைத்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
அந்த அலுவலகத்திற்கு இரண்டு பொலிஸார் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. அங்கிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு வண்டி கதிரைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து எனது வீட்டுக்கும் ஆதரவாளர்களான முஜீப் மற்றும் பசீர், மாஹீர் ஹாஜியாரின் வீடு என நினைத்து அவரது சகலன் இஸ்ஹாக் ஆகியோரின் வீட்டுக்கும் பெற்றோல் கைக்குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் சேதங்களும் எற்பட்டுள்ளன.
இந் நிலையில் இந்த தேர்தலில் மக்கள் எந்தளவு தூரம் சுதந்திரமாக வாக்களிப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவுள்ளது. இவ்வாறான அராஜகங்களுக்கு எதிராக எதிரணியினர் அணி திரளவேண்டும்’ என தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்சா, காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமட் லெவ்வை, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை தலைவர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான பி.ரி.எம்.முபாறக், எம்.முஸ்தபா உட்பட முக்கியஸ்தர் எம்.ஜ.எம்.முஜீப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 Comments