Ticker

6/recent/ticker-posts

சுன்னாகம் கிணறுகளில் எண்ணெய் !



யாழ்ப்பாணத்தின் சுன்னாகம் பகுதியிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் நிலத்தடி நீரினுள் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்தாக கூறப்படும் நோர்தன் பவர் நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உத்தரவிட்டுள்ளார். 
இதனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் கொழும்பில் மேற்கொண்ட சந்திப்பிலேயே அவர் இந்த முடிவை அறிவித்ததாகவும் கூறியுள்ளார்.

நோர்தேன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய், பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் விடப்பட்டமையால், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளான மல்லாகம், தெல்லிப்பழை, புன்னாலைக்கட்டுவன் அளவெட்டி உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள 800க்கும் மேற்பட்ட கிணறுகளில் கலந்துள்ளது. இது தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நடந்துவரும் அதேவேளை, பல்வேறு கண்டன போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது. வடக்கு மாகாண சபையால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, எண்ணெய் கசிவு தொடர்பான ஆய்வு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனத்தை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடனான இன்றைய சந்திப்பின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையம் வலியுறுத்தியிருந்தது.

எண்ணெய் கசிவுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டம் குறித்தும் அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் நிறுவனத்தை மூடுவதற்கு உத்தரவிட்டதுடன், இதனால் யாழ்ப்பாணத்துக்கான மின்சார விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments