முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கடற்படையில் இணைந்து கொள்ளப்பட்டமை குறித்து ஆராய்வதற்கு விசாரணைக் குழுவொன்றை கடற்படைத் தளபதி நியமித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கடற்படையில் லெப்டினனாக கடமையாற்றி வருகின்றார்.
எந்த அடிப்படையில் யோஷித்த ராஜபக்ஷ கடற்படையில் உள்ளீர்க்கப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
யோஷித்த ராஜபக்ஷ, கடற்படைச் சட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டதாக பாதுகாப்புச் செயலாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை கருத்திற் கொண்டு உரிய விசாரணை நடத்துமாறு கடற்படைத் தளபதிக்கு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடற்படையின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடற்படையிலிருந்து ராஜினாமா செய்வதாக யோஷித்த ராஜபக்ஷ, கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள போதிலும் இதற்கு கடற்படைத் தளபதி அனுமதியளிக்கவில்லை என கடற்படை பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார்.
யோஷித்த கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர், வழங்கப்பட்ட பதவி உயர்வு, வெளிநாட்டுப் புலமைப் பரிசில், கடற்படையில் கடமையாற்றியவாரே அரசியலில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஜே.வி.பி. கட்சியினரும் யோஷித்த தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments