Ticker

6/recent/ticker-posts

பெருந்தோட்ட அபிவிருத்திக்கு உதவி வழங்க ஐ.நா அபிவிருத்தி திட்ட நிறுவனம் இணக்கம்

க்கிய நாட்டு அபிவிருத்தி திட்ட நிறுவன பிரதிநிதிகளுக்கும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கும் இடையில் இன்று (28) காலை 10 மணிக்கு கொழும்பு 3ல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. 
இச்சந்திப்பில் ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்ட நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி திரு.சுபனே நந்தி மற்றும் இந்நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான உதவி பணிப்பாளர் கணேசராஜா ஆகியோரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானஜோதி, அமைச்சரின் ஆலோசகர் எம்.வாமதேவன் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

இச்சந்திப்பின்போது பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர், 2006ம் ஆண்டு ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்ட நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியோடு தயாரிக்கப்பட்ட பத்தாண்டு திட்டத்தினை நினைவுப்படுத்தி, அத்திட்டம் செயற்படாமல் போனது பற்றியும் எடுத்து விளக்கினார். 

பத்தாண்டு திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு, இத்திட்டத்தின் முக்கியமான அம்சம் வீடமைப்பு என்றும் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரித்துடனான ஏழு பேர்ச் காணியுடன் வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்வதே எமது அமைச்சின் முக்கிய நோக்கம் எனவும் எடுத்துரைத்ததாக அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அமைச்சின் செயலாளர் சிவஞானஜோதி, அமைச்சு மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளித்தார். 

இச்சந்திப்பில் பதிலளித்த ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்ட நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி திரு.சுபனே நந்தி, பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை பற்றி தான் நன்கு அறிந்துள்ளதாகவும், பத்தாண்டு திட்டத்தினை தயாரிப்பதற்கு ஒத்துழைத்ததுபோலவே அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். 

வதிவிட பிரதிநிதி மேலும் தெரிவிக்கையில் பத்தாண்டு திட்டத்தினை இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தில் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப மீள் வடிவமைத்தல் வேண்டும் எனவும், இத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு ஏனைய நாடுகளின் மூலம் உதவியினை பெற்றுகொள்வதற்காக தான் உதவி செய்வதாகவும் கூறினார். 

மேலும் ஐக்கிய அபிவிருத்தி திட்டம் தற்போது பெருந்தோட்ட பிரதேசங்களில் இயற்கை அனர்த்தங்களால் பாதிப்பு குறித்தும் சூழல் பாதுகாப்பு குறித்தும் ஆய்வுகள் செய்து வருவதாகவும் அவ்வாய்வுகளின் முடிவுகள் வீடமைப்புத் திட்ட உருவாக்கத்தில் உள்வாங்கப்பட்டு வீடமைப்பு திட்டங்கள் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த அமைச்சினை பெற்றுக் கொண்ட அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments