ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்திருக்கும் தற்போதைய நிலையில், பொது மக்களைக் குழப்பி, அவர்களது மனப்போக்கை மாற்றும் விதத்தில் தந்திரங்களும், சூழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியாக, அவரை ஒத்த உருவத்தில் மக்களைக் குழப்பும் விதத்தில் களமிறக்கப்பட்டிருக்கும் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ஆர்.ஏ.சிறிசேன, ( கொடி சின்னத்தில் போட்டியிடுபவர்) திடீரென ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருந்து பின் வாங்குவதாக அறிவிக்கும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் பொது வேட்பாளர் மைத்திரியின் ஆதரவாளர்கள் குழப்பம் அடையத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மக்களின் மனசுகளைக் கெடுக்கும் ஒரு தந்திரம் எனவும், தோல்வி பயத்தில் இருக்கும் ஆளும் தரப்பு இதுபோன்ற கபடத்தனங்களின் ஊடாக பொது வேட்பாளரின் வெற்றியை மழுங்கடிக்க முயல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டுமன்றி, ஐ.தே.க.முக்கியஸ்தர்களான சஜித் பிரேமதாச, ஹரீன் பெர்னாண்டோ போன்றவா்கள் திடீரென்று ஜனாதிபதியைச் சந்தித்ததாகவும், கட்சி மாறியதாகவும் கூட இனிவரும் நாட்களில் டம்மிகளை வைத்து பொய்யாக செய்திகள் பின்னப்படும் அடையாளம் தென்படுவதாகத் தெரிவித்திருக்கும் ராஜித சேனாரத்ன, இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் ஏமாறக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

0 Comments