வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களைக் கண்டறிவதற்காக நீதியமைச்சரினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி விமல் நம்புவசம் தலைமையிலான அந்தக் குழுவில்,ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் அசோக்க விஜேதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் சட்டத்தரணி எஸ்.கே லியனகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வெலிக்கடையில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கவனத்திற்கொண்டு நீதியமைச்சர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
அந்த சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக கடந்தகாலங்களில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அதன் அறிக்கை சம்பவத்தில் பொறுப்பு கூறவேண்டியவர்கள் தொடர்பில் தகவல் வெளிவராதவண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2012 ஆம் ஆண்டு வெலிக்கடையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்திருந்ததுடன், 20க்கும் அதிகமான கைதிகளும், விசேட அதிரடிப் படையினரும் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சம்பவத்தினால் வெலிக்கடை சிறைச்சாலையின் சொத்துக்களுக்கும் சேதமேற்பட்டிருந்தது.
0 Comments