ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வியாபாரம் முற்றாக வீழ்ந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து வௌியிட்ட அவர்,
இந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவது சட்ட விரோதமானது. ராஜபக்ஷவின் கட்டவுட்கள், தன்சல், பொருட்களை வழங்குதல் போன்றவற்றை பார்க்கும் போது இந்தத் தேர்தலுக்கு எவ்வாறு பணம் வீணடிக்கப்படுகின்றது என்பது மக்களுக்கு காணமுடியும்.
அனுராதபுரத்தில் அரச பேரணிக்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் அனுப்பப்படுகின்றன.
நாம் இந்த நாட்டு மக்களிடம் கேட்கிறோம் ராஜபக்ஷவின் ஒரு மக்கள் பேரணிக்காக 7,8 கோடிகள் செலவிட வேண்டுமா? இவ்வாறு மக்களின் பணத்தை ஜனாதிபதி வீணடிக்கிறார்.
எதிரணி மேடைகளுக்கு தீ வைத்து, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மக்களை அச்சமடையச் செய்கின்றனர். நேற்று அம்பலான்கொடையில் எமது கட்சி உறுப்பினர்களைத் தாக்கி, வீட்டுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
2010ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்த பலர் தற்போது விலகிச் சென்றுள்ளனர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இருந்த ஹெல உறுமய, ரிஷாட் பதியூதினின் கட்சி போன்றன ஜனாதிபதியை விட்டுச் சென்றுள்ளன. பெரும்பாலான கலைஞர்கள், ராஜபக்ஷ பற்றி எழுதிய ஊடகவியலாளர்கள் என பலர் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். எனவே ஜனவரி 8ம் திகதி அவரை தோற்கடிப்பது சாத்தியமே.
பொங்கமுவ நாலக்க தேரர் போலவே ஜனாதிபதியும் முன்னதாக தேர்தல் நடத்தப்படுவதால் தோற்றாலும் இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருக்க முடியும் என்கிறார். அவ்வாறான சட்டம் எந்த நாட்டில் உள்ளது?
வெற்றியடைந்த மைத்திரி வீட்டில் இருக்க தோற்ற ராஜபக்ஷ நாட்டை ஆளமுடியுமா?
நாங்கள் மக்களுக்கு கூறுகின்றோம் சந்தேகம் இன்றி உங்கள் வாக்குகளைப் பயன்படுத்துங்கள். வாக்களிக்காது இருக்க வேண்டாம். இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது. இதில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றால் 2022ம் ஆண்டு வரை இன்னும் 7 வருடங்கள் ஆட்சி புரிவார்.
உங்களது வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அளியுங்கள். தயக்கமின்றி உங்கள் வாக்குகளை வழங்குங்கள்.

0 Comments