Ticker

6/recent/ticker-posts

கோத்தாவின் கடற்படை கொலையாளிகள் குறித்து விசாரணை !

தமிழ் இளைஞர்களை கடத்தி கப்பம் பெற்றுக்கொண்டு கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல லட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று அவர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் மூன்று உயர் கடற்படை அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட உள்ள அதிகாரிகளில் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கடத்தப்பட்ட சில இளைஞர்கள் கப்பம் பெற்றுக் கொண்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு காலப் பகுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு கொட்டாஞ்சேனை, புளுமென்டல் வீதி, கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை போன்ற பல பகுதிகளில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்டவர்கள் திருகோணமலை மற்றும் கொழும்பு சைத்திய வீதி கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு கப்பம் பெற்றுக்கொண்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட உள்ள உயர் கடற்படை அதிகாரியின் காரியாலய அறையிலிருந்து கொல்லப்பட்ட ஐந்து இளைஞர்களின் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு கடத்தல்களுடன் தொடர்புடைய உயர் அதிகாரியொருவர் வெளிநாட்டு பயிற்சி ஒன்றில் பங்கேற்றுள்ளதாகவும், அவரை மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட 28 இளைஞர்களில் 11 பேர் கொல்லப்பட்டமை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏனைய கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளை பாதுகாத்துக் கொள்ள கடற்படையினரும், சட்டத்துறையைச் சார்ந்த அதிகாரிகளும் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments