பீ.எம். முஜீபுர் ரஹ்மான்
1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 4/5
பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிபீடம் ஏறிய ஐக்கிய தேசியக் கட்சி, 1978 ஆம்
ஆண்டில் உருவாக்கி நடைமுறைப்படுத்திய புதிய அரசியல் அமைப்பின் மூலமே
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது.
ஆனால், பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட இலங்கைப் பாராளுமன்றத்தில், 1948
ஆம் ஆண்டில் சோல்பரி அரசியலமைப்பே அமுலில் இருந்தது. அதன்போது, இன்ன
தொகுதிக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் இன்னார் என்று குறிப்பிட்டுக்
கூறக்கூடிய விதமாக தேர்தல் முறை வகுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட
எண்ணிக்கையினருக்கு ஒரு தேர்தல் தொகுதி என்றவாறு நாடுமுழுவதும் தேர்தல்
தொகுதிகளை உருவாக்கி தொகுதிவாரித் தேர்தல் நடத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை
தெரிவு செய்வதே சோல்பரி அரசியல் அமைப்பின் ஏற்பாடாக இருந்தது. இதன்மூலம்
மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருப்பார்கள்.
விகிதாசாரத் தேர்தல் முறையின் படி ஒரு தேர்தல் மாவட்டத்திற்கு 10
பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று
வைத்துக்கொண்டால் இந்த 10 பேருக்கும் வாக்காளருக்கும் எடுப்பாரில்லாப்
பிள்ளை போன்ற உறவுதான் இருந்தது. எனது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்
இன்னார் என்று எந்த வாக்காளரும் உரிமை கொண்டாட முடியாது. மக்கள்
கட்சிகளுக்கே வாக்களிப்பதால் பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாக்களித்த
மக்களுக்குமான இடைவெளி அதிகமாகவே காணப்படும். ஆகவே, விகிதாசாரத் தேர்தல்
முறையின் கீழ் இத்தகைய குறைபாடுகள் நிலவுவதை எவரும் மறுக்க முடியாது.
எதிர்க் கட்சி வேட்பாளர்களாகப் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்படும்
பிரதிநிதிகள் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வல்லமை
இல்லாதவர்கள். அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள்.
இதுதான் இப்பொழுது நடக்கிறது.
தொகுதிவாரி முறையில் சிறுபான்மையினர்
அழுத்தம் பிரயோகிக்கும் குழுவாக இருக்க முடியும். ஒரு தொகுதியில் கணிசமான
எண்ணிக்கையினராகச் சிறுபான்மையினர் இருக்கும்பட்சத்தில் அவர்களே
வெற்றிவாய்ப்பைத் தீர்மானிப்பவர்களாகவும் இருக்கலாம். இவ்வாறான நிலையில்
சிறுபான்மையினர் அழுத்தம் பிரயோகிக்கும் குழுவாகத் தங்கள் நலனை
உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை
சிறிய கட்சிகளுக்குப் பாதிப்பானது. மாவட்டமொன்றில் ஓரிரு தொகுதிகளில்
கூடுதலான செல்வாக்குள்ள ஒரு கட்சி தொகுதிவாரித் தேர்தல் முறையின் கீழ் அத்
தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட முடியும். மாவட்டம் முழுவதிலும்
வாக்கெடுப்பு நடத்தப்படும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் இக்
கட்சிக்கு ஒரு பிரதிநிதியும் இல்லாமற் போகலாம். எனவே விகிதாசாரப்
பிரதிநிதித்துவ முறை சிறிய கட்சிகள் தேய்ந்து போவதற்கே வழிவகுக்கும்.
பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதனாலும் சிறிய கட்சிகளுக்குப் பெரிதாகப்
பலன் ஏற்படப் போவதில்லை. மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறும் சிறிய
கட்சி வேட்பாளர்கள் பின்தள்ளப்பட்டுத் தோல்வி அடைவதற்கும் இடமுண்டு.
தொகுதிவாரி முறையின் கீழ் தொகுதி உடன்பாட்டின் அடிப்படையில் இன்ன கட்சிக்கு
இன்ன தொகுதி என்று ஒதுக்கீடு செய்யப்படுவதால் இப் பாதிப்பு ஏற்படுவதற்கு
இடமில்லை.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை சில நன்மையான
அம்சங்களைக் கொண்டிருப்பதாகத் தோற்றமளிக்கின்ற போதிலும் நடைமுறையில் அதனால்
உருப்படியான நன்மை எதுவும் இல்லை. கோடி கோடியாகச் செலவு செய்ய வேண்டிய
நிலைக்கு வேட்பாளர்களைத் தள்ளும் விகிதாசாரத் தேர்தல் முறையில் மாற்றம்
செய்வதை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் வரவேற்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ் தொகுதிகளோ முஸ்லிம் தொகுதிகளோ
இல்லாத காரணத்தால் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை சம்பந்தப்பட்ட தமிழ்,
முஸ்லிம் மக்களுக்கு பாதகமானது என்ற விடயத்தையும் நாம் இங்கு உற்றுநோக்க
வேண்டும்.
தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்குப்
பதிலாகத் தொகுதிவாரி முறையும் விகிதாசார முறையும் இணைந்த கலப்புத் தேர்தல்
முறையொன்றை நடைமுறைப்படுத்துவது சாலச்சிறந்ததாகும்.
“தேர்தல்
முறையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஜேர்மன் தேர்தல் நடைமுறை வாய்ப்பானதாக
அமைந்துள்ளது. ஒரே இன வளர்ச்சியடைந்த நாடுகளில் விகிதாசார முறை
வெற்றியளிக்கலாம். பல இனங்கள், இன முரண்பாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்
உடைய பிரதேசங்களில் விகிதாசாரத் தேர்தல் முறை பல கேள்விகளை எழுப்பி
நிற்கின்றது”.
பல்லின நாடொன்றில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை
பொருத்தமற்றது என்பதே பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
தொகுதிவாரி முறையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும் இணைந்த கலப்புத்
தேர்தல் முறையே ஜேர்மனியில் நடைமுறையில் இருக்கின்றது. இலங்கையிலும்
அவ்வாறான தேர்தல் முறையை நடைமுறைப் படுத்துவதே சிறுபான்மையினருக்கு சாதகமாக
அமையும்.
நன்றி - மீள்பாா்வை

0 Comments