Ticker

6/recent/ticker-posts

பிரதம நீதியரசரை வெளியேற்ற முடியாது: தினேஷ்

அரசியலமைப்பின் 107 ஆவது சரத்திற்கு அமையவே  பிரதம நீதியரசரை அப்பதவியிலிருந்து வெளியேற்ற முடியுமே தவிர ஜனாதிபதியாலோ, பிரதமராலோ உபுல் ஜய சூரியவினாலோ வெளியேற்ற முடியாது. எனவே, இவ்அரசாங்கம் அரசியலமைப்பை மீறியே மொஹான்  பீரிஸை வெளியேற்றியது என நேற்று சபையில் குற்றம் சாட்டிய தினேஷ் குணவர்த்தன எம்.பி. அரசாங்கம் பிழையான வழியில் பயணிக்கின்றது. இதனை திசைத்திருப்பிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நல்லாட்சி மலராது என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை  இடம்பெற்ற முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான்  பீரிஸ் வெளியேற்றப்பட்டமை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே தினேஸ் குணவர்த்தன எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இந்த புதிய அரசாங்கம் மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக ஏற்றுக்கொண்டது. அதன் காரணமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மொஹான் பீரிஸுக்கு தூதுவர் பதவியை வழங்கவும் சிறப்புரிமைகளை வழங்கவும் முன் வந்தார்.
இவ்வாறு பதவிகளை வழங்கி அவரை இராஜினாமா செய்து வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் அவையனைத்தும் தோல்வியே கண்டன.
எனவே, தமக்கு தேவையான ஒருவரை பிரதம நீதியரசராக நியமிக்க முடியாது போகும் என்ற நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பாவித்து மொஹான் பீரிஸ் வெளியேற்றப்பட்டார்.
பிரதம நீதியரசர் ஒருவரை அரசியலமைப்பின் 107வது ஷரத்தின் கீழேயே பிரதம நீதியரசரை நீக்க முடியும். ஆனால் அது பின்பற்றப்படவில்லை. அரசியலமைப்பை மீறியே இவ்வரசு செயற்பட்டுள்ளது. இந்த பயணத்தை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லா விட்டால் நாட்டில் நல்லாட்சி ஏற்பட போவதில்லை என்றார்.

Post a Comment

0 Comments