ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி காலத்தில் இலங்கையில் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள சொத்துக்களை தேடி அறிவதற்காக உலக வங்கியின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்பொருட்டு அடுத்த வாரம் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலருடன், வொஷிங்டன் செல்லவுள்ள மங்கள சமரவீர இதுகுறித்து உலக வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வருடத்திற்கு 2000 கோடி டொலர் முதல் (இலங்கை ரூபா 265000 கோடி) 4 ஆயிரம் கோடி (இலங்கை ரூபா 531,500 கோடி) வரை இவ்வாறு மோசடியான முறையில் வெளிநாடுகளில் பதுக்கப்படுவதாக உலக வங்கி நடத்தியுள்ள விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தற்போது பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சில நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், அந்த நாட்டின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.

0 Comments