இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி அளித்திருப்பது தமக்கு அதிருப்தியளிப்பதாக இந்திய அரசு தெரிவித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயற்படுத்த இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கினால் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எனினும் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று புதிய அரசு பதவியேற்றதும் குறித்த திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே கொழும்பு நகர துறைமுக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என, அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும் இத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த கால ஆட்சியின் போது இலங்கையில் சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆதிக்கம் புதிய அரசாங்கத்தினால் மாற்றம் ஏற்படும் என இந்திய அரசாங்கம் நம்பியிருந்தது. ஆனால் புதிய அரசாங்கத்தின் திடீர் திருப்பத்தினால் இந்திய அரசிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மார்ச் மாதம் இந்தியா செல்லவுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments