வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பை எடுத்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக திட்டித் தீர்த்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது இரண்டாம் தவனைக் காலத்திற்கு பின் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதுடன், மஹிந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகினார்.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேலும் குறிப்பிடுகையில்:-
அப்போதிருந்த 61 அரச கட்சி உறுப்பினர்களில் 56 பேர் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சி தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர் என தெரிவித்திருந்தனர்.
எனினும் அவர் தனது தவறுகளை உணர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எனும் நம்பிக்கையில் நானும், இன்னும் மூவரும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தோம்.
ஆனால் நான் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்காததை கூட அவர் பொருட்படுத்தாமல் அப்போதிருந்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டு எனக்கு எதிராக மேடை பேச்சுக்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ரணில் விக்கிரமசிங்கவிடம் அவரது கட்சியிலுள்ள 23 முக்கிய உறுப்பினர்களை தான் பதவிக்கு வந்ததன் பின்னர் தனது கட்சிக்கு அழைத்து கொள்கின்றேன் என வாக்குறுதியளித்திருந்தார்.
எனினும் அவரால் அந்த வாக்குறுதியை செயற்படுத்த முடியாமல் போன நிலையில் அறுவருக்கு மாத்திரம் தனது கட்சியில் இடங்கொடுத்தார்.
அவரின் இந்நடவடிக்கைகளை நான் அறிந்திருந்தும் பழைய விடயங்களை பெரிதுபடுத்தக் கூடாது எனும் காரணத்தினால் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசி அழைப்பொன்றை விடுத்தேன்.
அதன் போது அவர் என்னை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்தார். நான் அமைதியாக அவர் கூறியவற்றையெல்லாம் கேட்டு விட்டு குறிப்பிட்ட சிலர் மாத்திரமே அறிந்த அவரின் வாழ்க்கை ரகசியத்தை கூறினேன். உடனே அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.
பின்னர் மஹிந்த என்னை சிறிது சிறிதாக பழிவாங்கினார், என்னை உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எனக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து என்னை மிகவும் கேவலப்படுத்தினார், எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடியாது போய்விட்டது.
இந்நிலையில் கடந்த 9 வருடங்களாக அவர் நடத்திய அரசியல் சீரழிவுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் பல்வேறு தரப்பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர்.
எனினும் மீண்டும் ஒருமுறை நான் அரசியலுக்கு வர விரும்பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மானித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தேன்’ என்றார்
0 Comments