Ticker

6/recent/ticker-posts

சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அமைச்சர் ராஜித மறுப்பு

சிறுமி ஒருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளதாக தனது குடும்பத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு தெரிந்த ஒருவரின் மகளுடன் எனது மகனுக்கு நட்புறவு இருந்து வந்தது.
அவர் தனது பெற்றோரின் தொந்தரவுகளை பொறுத்து கொள்ள முடியாது வீட்டில் இருந்து வெளியேறியதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

முதலில் இந்த சிறுமி, எனது மூத்த மகனின் வீட்டுக்கு வந்த போது, சிறுமியை கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தோம். தனது வீட்டுக்கு செல்ல முடியாது என்று கூறியதால், எங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றோம்.
சிறுமியின் தந்தை தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கு எனது உதவியை பெற்றுத்தருமாறு சிறுமிக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். சிறுமி அதற்கு இணங்கவில்லை என்பதால், பெற்றோர் அவருக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.
எனது மகனுக்கு யுவதி ஒருவரை கடத்தும் எந்த தேவையும் இல்லை. அப்பாவி பிள்ளை என்பதால், சிறுமிக்கு நாங்கள் செவிகொடுத்தோம்.
இந்த சம்பவத்தின் பின்னால் இருப்பது யார் என்பதை நான் நன்கு அறிவேன். வியாபாரிகளுக்கு எதிராக நான் குரல் கொடுப்பதால், எனது வாயை மூட இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகின்றனர்.
இப்படியான சம்பவங்களினால் நான் எந்த வகையிலும் தளர்ந்து போய்விடப் போவதில்லை. சிறுமியின் பெற்றோரை வழிநடத்தி, அதற்கான பணத்தை செலவிடுவது யார் என்பது பற்றிய தகவல்களை வெளியிடவுள்ளேன்.
எனது இளைய புதல்வர் பெண்ணை கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டு வரும் பொய்யான செய்திகள், அதன் மூலம் எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொய்யான சேறுபூசும் பிரச்சாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையை வெளியிட இருப்பதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments