அமைச்சர் திரு வடிவேல் சுரேஷ்
“ பதுளை மாவட்ட முஸ்லிம்கள் அரசியல் அனாதைகள் என்று தம்மை எண்ணிக்கொள்ள தேவையில்லை. அவர்கள் கல்வி ரீதியாகவோ , அரசியல் ரீதியாகவோ புறக்கணிக்கப் பட மாட்டார்கள் . நீங்கள் என்மீது நம்பிக்கை வையுங்கள். நானும் உங்களை நம்புகின்றேன்”. என்று அண்மையில் நியமனம் பெற்ற ஊவா மாகாண தமிழ்கல்வி , விளையாட்டு ,இளைஞர் விவகார தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாசார அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்கள் தெரிவித்தார்கள்.
பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில், மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர், முன்னாள் அதிபர் ஏ எம் எம் முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்கள் மேற்படி கருத்தை தெரிவித்தார்கள்.
ஊவா மாகாண சபையில் தனியானதொரு தமிழ் கல்வி அமைச்சு உருவாக்கப் பட்ட நிலையில், கடந்த காலங்களில் (9௦ களின் ஆரம்பத்தில்) அமுலில் இருந்த தமிழ் கல்வி அமைச்சின் மூலம் ஊவா மாகாண முஸ்லிம் கல்வி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது போல் மீண்டும் அத்தகைய கசப்பான நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமைகள் ஏற்படுமா என்ற ஐயத்தை தெளிவு பெறும் நோக்கில் திரு வடிவேல் சுரேஷ் அவர்களுடன் மலையக முஸ்லிம் கவுன்சில் நிர்வாக உறுப்பினர்கள் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக மேற்படி கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது.
இக்கூட்டத்தில் தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்கள் “ நாம் மொழியால் ஒன்று பட்ட சமூகம். எங்களுக்கு மத்தியில் சில சில மாற்று கருத்துக்கள் பிரச்சினைகள் உள்ளதை மறுக்க முடியாது. நாம் இவ்வாறான சந்திப்புக்களை அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டு எமது பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். அப்போது தான் எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். அந்த வகையில் நான் “ மலையக முஸ்லிம் கவுன்சிலை” இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்படுத்தி தந்தமைக்காக பாராட்டுகின்றேன். இவ்வாறான கூட்டங்களை மாவட்டமெங்கும் மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும்.
அப்போது தான் எமது பிரச்சினைகளை நாம் நேரடியாக பேசித்தீர்க்க முடிவதுடன் கடந்த மாதம் நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்பது பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நாம் இந் நாட்டின் சிறும்பான்மை சமூகங்கள். எமக்கான பிரச்சினைகள் என்ன வென்பதை நானும் நீங்களும் அறிந்து வைத்துள்ளோம். எமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை நாம் பயன் படுத்திக் கொள்வோம். எனது அமைச்சினூடாக வழங்கப்படும் ஆசிரிய நியமங்களானாலும், ஏனைய வளப் பங்கீடுகள் என்றாலும் உங்களுக்கு அநீதி இழைக்கப் படாமல் உங்களுடைய பங்கை உங்களுக்கு தந்து விடுவேன். நான் உங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றேன் நீங்களும் என்னை நம்ப வேண்டும்.
இன்னும் ஒரு சில தினங்களுக்குள் ஊவா மாகாணத்திற்கான 1௦௦௦ தமிழ் மொழிமூல ஆசிரிய நியமனங்களுக்காக விண்ணப்பங் கோரப் படவுள்ளது. இதில் எவர்களுக்கெல்லாம் க பொ த (உ/த) பரீட்சையில் மூன்று பாடங்களுக்கு சாதாரண சித்தியுள்ளதோ அவர்களுக்கு தமிழ் முஸ்லிம் பேதமின்றி விண்ணப்பிக்கலாம்.
மேலும் நான் எனது அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் இயங்கும் வகையில் கல்வி ஆலோசனை சபையொன்றை நிறுவ உள்ளேன். அதில் முஸ்லிம்கள் சார்பாகவும் மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்து தாருங்கள். குறிப்பிட்ட இந்த ஆலோசனை சபையூடாகத்தான் எனது கல்வி சம்பந்தமான எதிர்கால அபிவிருத்திவேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளது. குறிப்பிட்ட இந்த சபையினூடாக நேரடியாக நீங்களும் பயன் பெறலாம்.
மேலும் நான் எனது அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் இயங்கும் வகையில் கல்வி ஆலோசனை சபையொன்றை நிறுவ உள்ளேன். அதில் முஸ்லிம்கள் சார்பாகவும் மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்து தாருங்கள். குறிப்பிட்ட இந்த ஆலோசனை சபையூடாகத்தான் எனது கல்வி சம்பந்தமான எதிர்கால அபிவிருத்திவேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளது. குறிப்பிட்ட இந்த சபையினூடாக நேரடியாக நீங்களும் பயன் பெறலாம்.
பல சோதனைகளுக்கு மத்தியில் தான் நீங்களும் சாதனைகளை படைத்து வருகின்றீர்கள் என்பதை நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன். சாமி வாரம் கொடுத்த பல சந்தர்ப்பங்களில் பூசாரி இடம் கொடுக்காத நிலையில் உங்களுடைய பல அடிப்படை தேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதையும் நான் அறிந்து வைத்துள்ளேன். குறிப்பாக இந்தப் பாடசாலையின் (பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி) கட்டப் பட்டுள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் மூன்றாவது மாடி ஏன் நிறுத்தப் பட்டுள்ளது, இந்த பாடாசாலையின் சுற்று மதில் ஏன் இதுவரை கட்டிதரப் படவில்லை போன்ற விடயங்களை நான் அறியாமல் இல்லை. எனது இன்றைய வருகையின் நிமித்தம் முதலாவது வேலைத்திட்டமாக இந்த பாடசாலைக்கான சுற்று மதிலை உடனடியாக அமைத்துத்தர எனது அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குகின்றேன்.
பேரினவாத கெடுபிடிகளுக்குள் சிக்கி இருக்கும்தமிழ் பேசும் சிறும்பான்மை சமூகங்களான நாங்கள் அரசியல் மற்றும் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் கைகோர்த்து செயற்படுவோம்” . என்றும் கருத்துக் கூறினார்.
இக்கூட்டத்தில் பதுளை மாவட்ட ஜம்மியத்துல் உலமா உப தலைவரும், பதுளை பஹ்மியா அரபிக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷைகு ஹிதாயத்துல்லாஹ் அவர்களும் வெளிமட பிரதேச சபை உறுப்பினர் எம் நசார் அவர்களும் குருதலாவா தேசிய பாடசாலை அதிபர் ஜாகிர், அந்நூர் கனிஷ்ட பாடசாலை அதிபர் எம் நயீம் , ப / அல் அதான் ம வி அதிபர் எம் ஜரூக், அல் ஹிக்மா கனிஷ்ட பாடசாலை அதிபர் எம் ஹாஷிம் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கருத்துரை வழங்கினார்கள்.





0 Comments