இனவாத பிரச்சாரங்களை முன்னெடுத்து நாட்டில் சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவோருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமையானது எமது கடந்த கால போராட்டங்களுக்கு கிடைக்கப்பெற்ற பெரு வெற்றியாகும் என மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதேவேளைஇ இச்சட்டமானது பேரினவாதிகளுக்கு பலத்த அடியாகும். இச்சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இனவாத பிரச்சாரங்களை முன்னெடுத்து நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியவர்களுக்கு பக்கபலமாக இருந்தமையாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார் எனவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இயங்கிவந்த இனவாத அமைப்புகளை தடைசெய்யுமாறு நாம் வலியுறுத்திவந்தோம். எனினும் அவை தடைசெய்யப்படாதுஇ அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப் பட்டன. இந்த பேரினவாத சக்திகளை முன்னாள் ஜனாதிபதி தமது அரசியலுக்கு பயன்படுத்த முயற்சித்தார். எனினும் அவரின் அரசியல் வீழ்ச்சிக்கு இதுவே காரணமாக அமைந்து விட்டது எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இனவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக அடாவடித்தனங்களை அரங்கேற்றியபோது நாம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும் தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்பாகவும் பல கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தோம் என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார் .
முஸ்லிம்களின் ஹலால் உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை தடைசெய்ய முற்பட்டனர். அத்துடன் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. மதரஸாக்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. இவற்றுக்கும்மேலாக தர்கா நகர், அளுத்கம, பேருவளை, வெலிப்பணை மற்றும் துந்துவ உள்ளிட்ட பல பகுதிகளில் இனவாதிகள் வன்முறையை தூண்டிவிட்டனர். இதனால் நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது. இந்நடவடிக்கைகளின்போதுஇ நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தக்கோரி மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுதழுவிய ஹர்தால்களை நடத்தி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தோம் எனவும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
தனி நபர்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதை தடுக்குமாறும் நாட்டில் இனவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறும் தொடர்ச்சியாக அப்போதைய அரசாங்கத்தை வலியுறுத்திவந்தபோது இவற்றை இவ்வரசு கண்டுகொள்ளவில்லை என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணிகளின் பிரதான தேர்தல் பிரச்சாரமாக இனவாதிகளை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவரப்படும் என நாம் வாக்குறுதியளித்தோம். அந்தவகையில் தற்போது சட்டமொன்று கொண்டுவரப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இது உடனடியாக அமுல்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இனவாத கும்பல் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை அரசியலுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன. இனவாதிகளின் நலனை பூர்த்திசெய்யக்கூடிய அவர் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பதானது பெரும் ஆபத்தாகும். இதனை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
0 Comments