Ticker

6/recent/ticker-posts

🔴எண்ணெய் வளத்தின் மீதான அமெரிக்காவின் அகோரப் பசி! வெனிசூவேலாவில் அமெரிக்கஅராஜகம்!

 


🔴எண்ணெய் வளத்தின் மீதான அமெரிக்காவின் அகோரப் பசி! 👇 #வெனிசூவேலாவில் அமெரிக்கஅராஜகம்!

அமெரிக்காவின் வரலாறு என்பது அடாவடித்தனத்தாலும், நயவஞ்சகத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு கொடிய வலைப்பின்னலாகும்.

அடாவடித்தனமான தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை கபளீகரம் செய்து, குருதியால் கறைபடிந்த “பெட்ரோடொலர்”களால் அது தனது கல்லாப் பெட்டியை நிரப்பி வருகிறது.

உலக அரசியல் மேடையில், தந்திரங்கள், கசடுகள் நிறைந்த கதாசிரியனாகவும், இரக்கமற்ற வில்லனாகவும் அமெரிக்கா ஒற்றை ஆதிக்கத்துடன் உலா வருகிறது.

உலக சனத் தொகையில் வெறும் 4 சதவீதத்தை மட்டுமே கொண்ட ஒரு தேசம்தான் அமெரிக்கா. என்றாலும் உலக எண்ணெய் வளத்தின் 25 சதவீதத்தைத் தனது தேவைக்காக அது விழுங்கிக் கொண்டிக்கிறது.
இந்த எண்ணெய் பெருவேட்கைக்காக ஈராக், லிபியா, சிரியா முதல் ஈரான், வெனிசூலா வரை பல நாடுகளின் இறையாண்மையை அது பதம்பார்த்திருக்கிறது. சிதைத்து சின்னாப்பின்னப் படுத்தியிருக்கிறது.

அதிகார மமதையில் தன்னிச்சையான பொருளாதாரத் தடைகளை விதித்து அந்த தேசங்களை மண்டியிட வைத்துள்ளது. இன்னும் பல நாடுகளை மண்டிட வைக்க கங்கனம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கிறது.

அமெரிக்காவின் இந்தத் தந்திரமான அரசியல், சர்வதேச சந்தையில் எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கியிருக்கிறது. எண்ணெய் விலையை விண்ணை எட்டச் செய்து தனது “பெட்ரோ டொலரின்” இருப்பைப் பாதுகாத்து வருகிறது.

இதனால் அமெரிக்க மக்களுக்கு எந்த பிரச்சினையும் வருவதில்லை. அமெரிக்காவின் எந்த மாநிலங்களும் பசியால், பட்டினியால் வாடுவதில்லை; மாறாக இந்தியா மற்றும் இலங்கை போன்ற வளரும் நாடுகளின் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை தாங்க முடியாத வாழ்க்கைச் சுமையில் திண்டாட்டத்தில் கழிகிறது.
'பெட்ரோ-டொலர்' (Petrodollar) எனும் தந்திரத்தைச் சிம்மாசனத்தில் அமர்த்திக் கொண்டு, பிற நாடுகளின் நாணய மதிப்பைச் சிதைப்பது அதன் வாடிக்கையான வேலையாக இருக்கிறது.

எதிர்காலத்தின் “அதிகார பலம்” இராணுவத்திடம் மட்டும் இல்லை என்பதை அது நன்றாக உணர்ந்திருக்கிறது. அந்த அதிகார பலம் எண்ணெய்க் கிணறுகளைக் கொண்ட நாடுகளிடம் தான் இருக்கிறது என்பதை அமெரிக்கா கணக்குப் போட்டு வைத்துள்ளது.
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை 'பயங்கரவாதிகள்' , “போதைப்பொருள் வியாபாரிகள்” எனச் சித்தரித்து, குற்றம் சுமத்தி எண்ணெய் வளமுள்ள தனக்கு மண்டிடாத நாடுகளின் நிர்வாக கட்டமைப்பை சீர்குலைத்து வருகிறது. அந்த நாடுகளின் ஆட்சிகளுக்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து, போசித்து போராட வைத்தும் வருகிறது.

மத்திய கிழக்கில் புற்றீசல்கள் போல் பிறப்பெடுத்த அல்**கைதா, ஐ**எஸ் போன்ற மதவாத தீவிரவாத இரத்தக் காட்டேரிகளை தீனி போட்டு வளர்த்தெடுத்து, மத்திய கிழக்கின் அரசியல் சமநிலையை சீர்குலைத்ததன் பின்னணியில் இருப்பதும், அமெரிக்காவின் இந்த எண்ணெய் மீதான ஆர்வம் தான்.

தேர்தல் ஜனநாயகம் உள்ள நாடுகளில் கலகங்களை, கலவரங்களை உருவாக்கி அந்த நாடுகளில் அமைதியை சீர்குலைத்து விட்டு, ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறி பல நாடுகளின் இறையாண்மையில் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா, தேர்தல் என்ற ஜனநாயகத்தின் தாத்பரியத்தை ஒருபோதும் கண்டிராத மன்னராட்சியால் தனக்குத்தானே முடிசூடிக்கொண்டுள்ள எண்ணெய் வள நாடுகளோடும், அதன் எஜமானர்களோடும் கொஞ்சிக் குலாவி தனது தந்திர அரசியலை செய்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பு புதைந்து கிடக்கும் நாடுதான் வெனிசூலா. அமெரிக்க முதலாளியத்திற்கு எதிராக செயற்படும் அந்த நாடு, இன்று அமெரிக்காவின் ‘கொல்லைப்புற அரசியல்’ வேட்டைக்காடாக மாறியுள்ளது.

கடந்த ஜனவரி 3, 2026 அன்று, வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கடத்திச் சென்ற அமெரிக்காவின் செயல், ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தனது நாட்டு வளங்களை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்க மறுத்த ஒரே காரணத்திற்காக, வழிப்பறித் திருடர்களைப் போல ஒரு நாட்டுக்குள் நுழைந்து ஒரு நாட்டின் தலைவரை கடத்திச் செல்வது எந்த வகை நீதி என்றே கேட்கத் தோன்றுகிறது?

1989-ல் பனாமாவின் மானுவேல் நொரீகாவை இதே பாணியில் அமெரிக்கா கடத்தியது. சி.ஐ.ஏ (CIA) அமைப்போடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மானுவேல் நொரீகாவுக்கே அந்த கதி என்றால், அமெரிக்காவின் எதேச்சாதிகார, ஏகாதிபத்திய அரசியலை எதிர்க்கும் நாடுகளின் நிலை என்னவாகும்?

உலகில் கறுப்புத் தங்கம் என்று வர்ணிக்கப்படும் எண்ணெய் வளத்தை கொள்ளையிடுவதற்காக எத்தகைய அநீதியையும், அக்கிரமத்தையும் இழைக்க அமெரிக்கா தயங்குவதில்லை. டொலரின் மதிப்பிற்குச் சிறு அச்சுறுத்தல் வந்தாலும் அதன் எதிர்வினை ஈவிரக்கமின்றி ரத்தவாடையோடு எழுந்து நிற்கும்.
அமெரிக்க டொலருக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் அமெரிக்காவின் கைகள் ரத்தத்தால் சிவக்கின்றன:

🔹 சதாம் ஹுஸைன் அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு யூரோவுக்கு எண்ணெய் விற்க முயன்றதற்காகத் தூக்குக்கயிறு பரிசளிக்கப்பட்டது.

🔹 முஅம்மர் அல் கதாபி ஆப்பிரிக்க நாணயத்தை உருவாக்கத் திட்டமிட்டதற்காகப் படுகொலை செய்யப்பட்டார்.

🔹 ஜனநாயக ரீதியாக தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவான முகமது முசத்திக் என்ற ஈரானிய ஜனாதிபதி 1953-ல் ஈரானின் எண்ணெய் வளத்தை அரசுடைமையாக்கி, மக்களுக்கே சொந்தமாக்கத் துணிந்ததற்காக அமெரிக்காவின் சீஐஏ மற்றும் பிரித்தானிய உளவு அமைப்பான MI6 வடிவமைத்த 'ஒபரேஷன் அஜாக்ஸ்' என்ற சதி நடவடிக்கையிள் மூலம் வீழ்த்தப்பட்டார்.

அந்நாட்டில் ஜனநாயகத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, தனது கைப்பாவையான மன்னர் ஷா பஹ்லவியிடம் ஆட்சியை ஒப்படைத்து, மன்னர் ஆட்சியை மீண்டும் அங்கு நிலைநிறுத்தியது அமெரிக்கா.

இன்று அதே வரலாறு மீண்டும் திரும்புகிறது.1979ம் ஆண்டு ஈரானில் மக்கள் புரட்சியால் விரட்டப்பட்ட மன்னர் ஷாவின் ஆட்சியை அவரின் மகனின் மூலம் மீண்டும் கொண்டு வர அமெரிக்கா திரைமறைவு திருகுதாளங்களை செய்து வருகிறது.

ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள போராட்டங்களை எண்ணெய் ஊற்றி பற்ற வைக்கும் வேலையை அமெரிக்கா கச்சிதமாக செய்து வருகிறது.
பொருளாதாரத் தடைகள் மூலம் ஒரு தேசத்தைப் பட்டினியில் போட்டு பாடுபடுத்தி விட்டு அந்நாட்டில் போராட்டங்கள் நிகழும் போது ஜனநாயகம் பற்றி அந்தந்த நாடுகளுக்கு வெட்கமின்றி பாடமெடுக்கவும் அமெரிக்கா தயங்குவதில்லை.

அமெரிக்க உளவு நிறுவனங்களோடு பணியாற்றி விட்டு அமெரிக்கா உலகிற்கு இழைத்திருக்கும் அநியாயங்களையும், அக்கிரமங்களையும் "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற நூலின் மூலம் ஜோன் பெர்கின்ஸ் John Perkins வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். என்றும் போல, அமெரிக்காவின் இந்த “குள்ளநரித்தனமான அரசியல்” இன்னும் ஓயாமல் இயங்கு நிலையில் இருந்து வருகிறது.

அமெரிக்கா அணிந்திருக்கும் ஜனநாயகம், மனித உரிமை என்ற பளபளப்பான முகமூடிகளைக் கழற்றிப் பார்த்தால், அங்கே கச்சா எண்ணெய்யின் வாசனையோடு ஒடுக்கப்பட்ட மக்களின் இரத்தத்தின் வாடையுமே வீசிக்கொண்டிருக்கும் என்பதே உண்மையாகும்.

உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த நவீன ஏகாதிபத்திய அராஜகத்தை எதிர்க்காதவரை, ஒவ்வொரு தேசமும் இந்த அமெரிக்க அராஜக சுழியில் சிக்கி அழிய வேண்டி வரும்.

Post a Comment

0 Comments