Ticker

6/recent/ticker-posts

விமான விபத்தில் பலியான 3 விமானிகளுக்கு இறுதி அஞ்சலி

இந்தியா டோர்னியர் விமான விபத்தில் பலியான 3 விமானிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கடந்த மாதம் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் வித்யாசாகர், எம்.கே.சோனி, சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 விமானிகளுடன் மாயமானது. ஒரு மாத தேடலுக்கு பின்னர் விமானத்தின் பாகங்களும், மனித எலும்புகளும் கடலூர் பிச்சாவரம் கடல் பகுதியில் மீட்கப்பட்டன.
இந்த எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அந்த விமானிகளுடையது தான் என உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னரே 3 விமானிகளின் இறப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 3 விமானிகளும் எப்படியும் உயிரோடு திரும்பி வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த அவர்களுடைய குடும்பத்தினர் இதனால் சோகம் அடைந்தனர்.

கடலோர காவல்படை சார்பில் பலியான 3 விமானிகளுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை பரங்கிமலையில் உள்ள கடலோர காவல்படை பயிற்சி நிலையத்தில் நேற்று நடந்தது. விமானிகளின் எலும்புகள் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, அதன்மேல் அவர்களது உருவப்படங்கள் மலர்மாலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

விமானி சுபாஷ் சுரேசின் தந்தை சுரேஷ் சுப்பிரமணியன், தாயார் பத்மா, மனைவி தீபா, எம்.கே.சோனியின் மனைவி அம்ருதா, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். விமானிகளின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

கிழக்கு பிராந்திய கடலோர காவல்படை ஐ.ஜி. எஸ்.பி.சர்மா, தென்பிராந்திய தலைமை ராணுவ அதிகாரி ஜக்பீர்சிங், தாம்பரம் விமானப்படை தலைமை அதிகாரி ரிப்பன்குப்தா, தமிழக டி.ஜி.பி. அசோக்குமார், கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, டோர்னியர் விமானத்தின் கமாண்டிங் அதிகாரி சந்தீப்சோப்ரா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று ஓய்வுபெற்ற அதிகாரிகள், விமானிகளின் குடும்பத்தார், உறவினர்கள், விமானிகளுடன் பணியாற்றியவர்கள் என பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் கடலோர காவல்படை மற்றும் கப்பல்படை அதிகாரிகள் விமானிகளின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், விமானிகளின் உடல் பாகங்கள் வைக்கப்பட்ட பெட்டி இறுதி சடங்குகளுக்காக அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Post a Comment

0 Comments