மத்திய வங்கிக் கட்டிடத்துக்கு பிரபாகரன் குண்டுத் தாக்குதல் நடத்திய போதும் வீழ்த்த முடியாது போன நாட்டின் பொருளாதாரத்தை இன்றைய அரசாங்கம் பிணைமுறி விநியோகத்தின் மூலம் வீழ்த்தி இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார்.
சரத் என் சில்வாவின் இந்த நிலைப்பாடு ஒட்டுமொத்தமான அரசியல் சேறுபூசும் ஒரு கைங்கரியமாகவே நோக்கப்பட வேண்டியதொன்றாகும்.
முதலில் இந்த சரத் என். சில்வா என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என்பதை பார்த்துக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
பிரதம நீதியரசராக பதவி வகித்த காலத்திலேயே சகல மட்டத்திலும் விமர்சிக்கப்பட்ட ஒரு பிரகிருதியாகவே இவர் காணப்பட்டார். அந்தக் காலப் பகுதியில் ஊடகங்களில் பரவலாகவே விமர்சிக்கப்பட்டவர்.
நாட்டின் நீதித்துறையின் மிக உயர்ந்த பதவியினை வகித்தவரான அவரின் அத்தகைய செயற்பாடுகளால் நீதித்துறைக்கு அபகீர்த்தி ஏற்படும் நிலை காணப்பட்டது.
அவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடைசியாகச் செய்த காரியங்கள் நீதித்துறைக்கு அச்சுறுத்தலாக அமைந்தன.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட “சுனாமி’ க்குப் பின்னரான பொதுக்கட்டமைப்பை அன்றைய அரசு ஏற்படுத்தியிருந்த போது அதற்கெதிராக மஹிந்த ராஜபக்சவின் தூண்டுதலின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சாதகமாக வழங்கி குழப்பியடித்ததுடன் அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை பிரிப்பதற்கும் சாதகமான தீர்ப்பை வழங்கி இருந்தார்.
இது போன்ற முறையற்ற பல விடயங்களை நீதித்துறையில் கையாண்ட இவர் ஓய்வுபெற்றதன் பின்னர், தனது பதவிக்காலத்தில் சில தவறான தீர்ப்புகளை வழங்கியதாக பகிரங்கமாகி ஏற்றுக் கொண்டவராவார்.
உண்மையிலேயே அன்றே அவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற பின்னராவது நேர்மையாக நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. நீதித்துறைக்கு களங்கம் ஏற்படக் கூடியவிதத்தில் அரசியல் மேடைகளில் கருத்துக்களை வெளியிட்டார்.
ஒரு கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விமர்சித்தவர். அடுத்து மஹிந்த ராஜபக்சவை மோசமாக விமர்சித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஒரு கட்டத்தில் ஆதரவளித்தவர். பின்னர் மீண்டும் மகிந்தவுடன் சேர்ந்து பொன்சேகாவை விமர்சித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஆரம்பத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தவர். இடை நடுவில் மீண்டும் மஹிந்தவின் மேடையில் மைத்திரி அணியை விமர்சிக்கத் தொடங்கினார்.
இவை அனைத்தும் அவரது சுயநலப் போக்கையே பிரதிபலித்தன.
இப்போது பாராளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் இறுதிக்கட்டத்தில் மத்திய வங்கி விவகாரத்தை தூசு தட்ட முனைந்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விநியோக விவகாரத்தில் ஊழல், முறைகேடுகள் இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரும் கூட ஒரு அரசியல் அணியின் பின்னால் தொங்கிக்கொண்டு சேறு பூசும் ஒரு கைங்கரியத்தைச் செய்யும் முயற்சியிலீடுபட்டுக்கொண்டிருப்பது நீதித்துறையில் உன்னத பதவி வகித்தவர் என்ற அடிப்படையில் உகந்ததொன்றலல என்பதை சரத் சில்வா உணர மறுப்பது விசனிக்கத்தக்கதாகும்.
இந்த விடயத்தில் சரத் என் சில்வா தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்குப் பதிலாக மற்றவர்களின் கருத்துக்களை மேற்கோளாக எடுத்து அதன் மூலம் நியாயம் கற்பிக்க முனைந்து கொண்டிருக்கிறார்.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விரிவான விளக்கங்களுடன் ஊடகங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆரம்பம் முதல் இறுதி வரையான முழு விபரங்களும் அவரால் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தேர்தல் நெருங்கும் வேளையில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேசித்திரிகிறார்.
மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை தான் பிரதம நீதியரசராக இருந்த போது விசாரிக்கப்பட்டதாகவும் அதன் தீர்ப்பில் குற்றவாளியாக காணப்பட்ட பிரபாகரனுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கியதாக கூறும் சரத் என் சில்வா,
பிணைமுறி விவகாரத்தின் மூலம் பொருளாதாரத்தை சீர்குலைத்த தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கும் அவரை அப்பதவிக்கு நியமித்தவர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அரசியல் மேடையில் நீதித்துறையின் உச்ச ஸ்தானத்தில் இருந்த ஒருவர் இவ்வாறு பேசுவதானது வெட்கித் தலைகுனிய வேண்டியதாகவே நோக்க வேண்டியுள்ளது.
எமது நாட்டின் நீதித்துறைக்கு மிக மோசமான களங்கத்தை ஏற்படுத்திய சரத் என் சில்வா போன்றோரை முதலில் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதன் மூலம் தான் எமது நாட்டின் நீதித்துறையை களங்கமற்றதாக மாற்றியமைக்க முடியும்.
tamilwin.com

0 Comments