வடமாகாகண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், ஜோன் அமரதுங்கவுடன் இணைந்து இராணுவத்தினரை பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்துவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
விமல் வீரவன்ச, தொடர்ந்து உரையாற்றுகையில்,
''தோல்வியடைந்தது மஹிந்த ராஜபக்ச மட்டுமல்ல, இந்த நாடும்தான். புலிகளில் 200 பேரை விடுதலை செய்துள்ளனர். 287 புலிகள் இன்னும் இருக்கின்றனர். அவர்கள், அடுத்த 17ம் திகதிக்கு பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளனர். மனித படுகொலை செய்த பிரபாகரனை, அவர்கள் என்று விளிக்கும் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை மீட்டெடுத்த மஹிந்தவை கள்ளர் என்கின்றார்.
யுத்தத்தை முன்னெடுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சிறைக்கு அனுப்புவதற்கு முயற்சிக்கின்றனர். மத்திய கிழக்கில் துப்பாக்கி ரவையில் செய்ததைதான் ஜனவரி 8ம் திகதி புள்ளடியில் செய்தனர் என்றால், இலங்கையின் ஐக்கியத்தை பாதுகாத்த, நாட்டை பாதுகாத்த தலைவருக்கு, சிங்கக் கொடிக்கும் சிங்கத்துக்கு பாதுகாப்பு கொடுத்த மஹிந்த ராஜபக்சவை கள்வர் என்கின்றனர். ஜனவரி 8ம் திகதி செய்ததை எதிர்வரும் 17ம் திகதி செய்ய முடியாது என்பதனை நான் தெளிவாக கூறிக்கொள்கின்றேன்'' என்று விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இனவாத ரீதியாகவும், சேறுபூசும் விதமாகவும் விமல் வீரவங்ச தொடர்ச்சியாக தனது பிரசாரத்தை முன்னெடுத்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கடுமையான, சேறுபூசும் பிரசாரத்தை விமல் வீரவங்ச முன்னெடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
tamil.srilankamirror.com

0 Comments