பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனை கொடூரமாக வதைத்து, அவர் கத்தும் சத்தத்தை அவரது தோழிக்கு தொலைபேசி மூலம் கேட்கச் செய்தே கொலை செய்திருப்பது தனக்கு தெரிய வந்திருப்பதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் கதைக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமும், அவரது அடிவருடிகளும் அச்சமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து
கொண்டு உரையாற்றும் போதே சுஜீவ சேனசிங்க இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் 3 வருடங்களுக்கு முன்னர் முன்னைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளாது மூடி மறைத்திருந்தது. இது தேர்தலை இலக்காக வைத்து நடத்தப்படும் விசாரணைகள் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. வசீம் தாஜூதீனின் பெற்றோருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாகனம் ஒன்று மோதி முழுமையாக தீப்பிடித்து எவரும் இறந்ததில்லை. அவ்வாறு வாகனம் தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டிருந்தால், ரக்பி வீரரான வசீம் அதுவரை வாகனத்தின் ஆசனத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தது புதுமையானது.” என்றுள்ளார்.

0 Comments