Ticker

6/recent/ticker-posts

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை- குவியும் வாழ்த்துகள்

நியூயார்க் ஆகஸ்ட் 12- உலகப் புகழ்பெற்ற தேடல் இணையத்தள நிறுவனமான கூகுளின் (google) தலைமை செயல் அதிகாரியாக இந்தியா நாட்டைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை,43 நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து  பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.மோடி சமூக வலைத் தளமான டிவிட்டரில் தனது வாழ்த்துகளை சுந்தர் பிச்சைக்கு தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை, சென்னையில் 1972-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் திகதி ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரகுநாத பிச்சையின் மகனாக பிறந்தார். இவரின் தந்தை ரகுநாத பிச்சை, சென்னையில் ஜி.இ.சி. நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றியவர். இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் போன்றவை
இருந்திருக்கவில்லை. ஆனால், சுந்தர் பிச்சையின் தந்தை, தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தைச் செலுத்திவந்தார்.சுந்தர் பிச்சை, பள்ளிப்படிப்பை சென்னை அசோக் நகர் ஜவகர் வித்யாலயாவில் படித்தார். 1987-ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றார்.

கரக்பூர் ஐ.ஐ.டி.யில் உலோகப்பொறியியல் பட்டம் பெற்றார். அமெரிக்கா சென்று கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து எம்.எஸ். பட்டம் பெற்றார். பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்து எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் உருவாக்க மேலாண்மைத் துறையின் துணைத் தலைவராக சுந்தர் பிச்சை சேர்ந்தார். கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமையைப் பெற்றவர். கூகுள் ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார். ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி குறிப்பிடத்தக்கது.11 ஆண்டுகள் கடுமையான உழைப்பால் இப்போது அவர் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.       
சுந்தர்பிச்சையின் பெற்றோர், அவருடன் கலிபோர்னியாவில் வசிக்கின்றனர். சுந்தர் பிச்சையின் மனைவி பெயர் அஞ்சலி. இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதன் மூலம் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் ஜாம்பவான்களின் பட்டியலில் சுந்தர் பிச்சையும் இணைந்துள்ளார்.உலகளவில் முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் தமிழர்கள் அதிகமாக இடம் பெறுவதற்கு சர்வதேச பத்திரிக்கையான டைம் இதழும் பாராட்டு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments