Ticker

6/recent/ticker-posts

சிங்கள மொழியில் கற்பதற்கு ஒரு சிறந்த ஆரம்ப பாடசாலையாக ஏ.ஈ. குணசிங்க வித்தியாலயத்தை உருவாக்கியிருக்கிறோம்! . முஜீபுர் றஹ்மான்

கொழும்பு குணசிங்கபுரவில் உள்ள ஏ.ஈ. குணசிங்க வித்தியாலயத்தை சிங்கள மொழியில் ஒரு ஆரம்ப பாடசாலையாக தரம் உயர்த்தி மாற்றி வருகிறோம். இதற்காக எமது தனவந்தர்கள் சுமார் ஒரு கோடி ரூபாயை செலவிட்டுள்ளனர். மத்திய கொழும்பில் சிங்கள மொழியில் கற்க விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையவிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார்.


கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றம் Colombo District Development Foundation (CDDF)  ஏற்பாடு செய்திருந்த, கொழும் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இவர் உரையாற்றினார்.

கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலய எம்.சி. பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நேற்று 22.10.2016 இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட முஜீபுர் றஹ்மான் தனதுரையில்:
மத்திய கொழும்பு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது கல்விப் பிரச்சினையாகும். அது, அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு சிறந்த பாடசாலையொன்றை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும். குறிப்பாக தமது பெண் பிள்ளைகளுக்கு பெண்கள் பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பெற்றோர் இன்று பலத்த போராட்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

மத்திய கொழும்பிலுள்ள பாத்திமா மற்றும் கைரியா பாடசாலைகளுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெற்றோர் நாளுக்கு நாள் என்னிடம் உதவிதேடி வருகின்றனர். இந்த இரண்டு பாடசாலைகளுக்கும் பலநூறு விண்ணப்பங்கள் வருகின்றன. அவர்களால் அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.  கொழும்பு நகரின் சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்றவாறு எமது பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படாதது பெரும் குறையாகும். கடந்த 20 வருட காலத்தில் ஒழுங்காக பாடசாலைகள் அபிவிருத்திச் செய்யப்படாத காரணத்தினால் இன்று மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

எமது பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை பெண்கள் பாடசாலைக்கு அனுப்புவதற்கே அதிகம் விரும்புகின்றனர். இதனால் பெண்கள் பாடசாலைகளுக்கு கேள்வி அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடியை குறைப்பதற்கு நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு நடவடிக்கையாக மத்திய கொழும்பில் உள்ள கலவன் பாடசாலைகளை தனியான ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலையாக நாம் மாற்றி வருகிறோம்.

கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தை பெண்கள் பாடசாலையாகவும், மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தை ஆண்கள் பாடசாலையாகவும் நாம் மாற்றி இருக்கிறோம். அதேபோன்று எமது மாகாண சபை உறுப்பினர்களான ஏ.ஜே.எம். பாயிஸ், அர்ஷாத் நிஸாம்தீன் போன்றோர் இந்த திட்டங்களுக்கு உழைத்து வருகின்றனர். கொழும்பு வடக்கு பாடசாலைகளான ஹம்ஸா வித்தியாலயம் ஆண்களுக்கான பாடசாலையாகவும், சேர் ராஸிக் பரீத் வித்தியாலயம் பெண்களுக்கான பாடசாலையாகவும் மாற்றப்பட்டள்ளது. எமது கலாசாரம் ஏற்றுக்கொண்டுள்ள பெண் பிள்ளைகளும், ஆண் பிள்ளைகளும் தனியாக கற்கும் இந்த வேலைத்திட்டம் பலரதும் பாராட்டை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல், பெண்கள் பாடசாலைக்கு இருக்கும் கேள்வியையும் நெருக்கடியையும் இந்தத் திட்டம்  எதிர்காலத்தில் குறைக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

சிங்கள மொழிமூல ஆரம்ப பாடசாலை ஒன்றை மத்திய கொழும்பில் புனரமைக்கும் பணியில் நான் ஈடுபட்டுள்ளேன். கொழும்பு 12. குணசிங்கபுரவில் உள்ள ஏ.ஈ. குணசிங்க வித்தியாலயத்தை சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைத்து வருகிறோம்.

முற்றிலும் தனவந்தர்களின் நிதி உதவியினால் இந்த அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்ததப்படுகிறது. சிங்கள மொழி மூலம் கற்க விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையவிருக்கிறது. இது ஓர் ஆரம்ப பாடசாலையாகும். தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரை கற்பதற்கு இந்த பாடசாலையில் அனுமதி வழங்கப்படும். ஆறாம் ஆண்டிலிருந்து இவர்கள் வேறு பாடசாலைகளுக்கு மாற்றி கல்வியை சிறந்த முறையில் தொடர்வதற்கான ஏற்பாடுகளையும் நாம் செய்து வருகிறோம் என்றும் கூறினார்.



இந்தக் கூட்டத்தில் சட்டத்தரணி யூ. ஏ. நஜீப், வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பிரபா, அல்ஹாஜ் இஸ்மத், அஷ்ஷெய்க் யூ.கே. றமீஸ, மேல்மாகாண சபை  அங்கத்தவர்களான அர்ஷாத் நிஸாம்தீன், ஏ.ஜே.எம். பாயிஸ் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

Post a Comment

0 Comments