Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் மலேசிய விஜயத்திற்கு கண்டனம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் 15ம் திகதி மலேசிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகவும், அவரின் விஜயத்தை கண்டிப்பதாகவும் பினாங்கின் இரண்டாவது துணை முதல்வர் டாக்டர் இராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


மலேசிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள  டாக்டர் இராமசாமி,   இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரையில் மைத்திரிபால சிரிசேன மலேசியாவில் இருப்பார் என்றும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ள மைத்திரிபால சிரிசேன  இன்னொரு போர்க்குற்றவாளி எனவும்  வர்ணித்துள்ளார்.

சிரிசேனா ஒன்றும் புனிதரல்ல என்றும், தமிழர் இன அழிப்பின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நடந்த இன அழிப்புக்கும் இடம்பெயர்ந்து சொந்த நிலத்திலேயே தமிழர்கள் அகதிகள் ஆனதற்கும் மஹிந்த ராஜபக்ஷ எவ்வளவு காரணமோ, அதே அளவுக்கு சிரிசேனாவும் காரணம் என்று இராமசாமி சாடியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின்  வருகையின் போது எதிர்ப்புக் குரல் எழுப்பி, ஆட்சேப ஆர்ப்பாட்டம் நடத்திய மஇகா மற்றும் இதர இந்திய அமைப்புக்களின் தலைவ ர்கள், இப்போது எங்கே போனார்கள்? என்றும் டாக்டர் இராமசாமி, கேள்வி எழுப்பியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் வருகையின் போது தங்களின் எதிர்ப்பை மலேசிய தமிழர்கள் காட்டினார்கள் என்பதை அறிந்திருந்தும் அவர்களின் உணர்வுகளை எல்லாம் நசுக்கி எறிந்து விட்டு மைத்திரிபால சிரிசேனாவை அரசாங்கம் அழைத்திருப்பதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments