நல்லாட்சியிலும் இனவாத நச்சு விதைகள் தூவப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி, பெண்கள் பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி மற்றும் கலாச்சார மத்திய நிலையம் என்பனவற்றுக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இனவாதப் போக்கு திட்டமிட்டு தூண்டப்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் தனக்குள் எழுந்துள்ளதாகவும் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களை குழப்பியடித்து இனவாதத்தைத் தூண்டி கவனத்தை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இனவாதத்தைத் தூண்டும் பொதுபலசேனாத் தலைவர் ஞானசாரர் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தொண்டர்களைத் திரட்டிக் கொண்டு எவ்வாறு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை பவனி வர வழியேற்பட்டது? எனவே, எங்கிருந்தோ பூரண அனுக்கிரகமும், அனுசரணையும், ஆதரவும் ஞானசாரருக்கும், பேரின மதவாதிகளுக்கும் கிடைக்கிறது என்பதுதான் யதார்த்தமான ஒன்றாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
குழப்பவாதிகளை கூண்டில் போட வேண்டிய பொறுப்பு மிக்க சமகாலக் கடமையை நல்லாட்சி அரசு செய்தாக வேண்டுமெனவும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் இனவாதத்தைத் தூண்டுவோரை அடக்க வேண்டிய தேவை நல்லாட்சியின் நாயகர்களான ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் உண்டெனவும் தெரிவித்தார். athavannews.com
0 Comments