Ticker

6/recent/ticker-posts

பறிகொடுக்கப்பட்ட பலஸ்தீன்! - லத்தீப் பாரூக்

மனித வரலாற்றில் மிகவும் இருள் சூழ்ந்த தினமாக 29 நவம்பர் 1947 பதிவாகியுள்ளது. அன்றைய நாளில் தான் அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஹரி.எஸ்.ட்ரியுமன் தலைமையில் வழிநடத்தப்பட்ட ஐரோப்பிய ஏகாதிபத்தியவாத தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையை மிரட்டிப் பணிய வைத்து உலகின் பல இடங்களில் நாடோடிகளாக வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களுக்காக அவர்கள் அதுவரை கண்டு கூட இருக்காத பலஸ்தீனம் என்ற நாட்டை பலஸ்தீன மக்களிடம் இருந்து காவு கொண்டு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினர். இன்று அந்த நாடுதான் உலகின் எல்லா சாபக்கேடுகளுக்கும் அழிவுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சாசனத்தை மட்டுமன்றி உலகில் அறியப்பட்டிருந்த ஏனைய சட்டங்கள், தர்மங்கள், தார்மீக விழுமியங்கள் மற்றும் கொள்கைகள் என எல்லாவற்றையும் குழி தோண்டிப் புதைத்து விட்டுத் தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினத்தில் தான் மனித விழுமியங்கள் அனைத்துமே சிதைவுற்றன.
இதன் மூலம் பலஸ்தீனர்களின் தாயகபூமி யூதக் குடியேற்ற வன்முறையாளர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்த மத்திய கிழக்கை நிலை குலையச் செய்ய வேண்டும் என்ற பிரிட்டிஷ் அரசாங்க சதி முயற்சியின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட நாள் இன்றுதான். இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட பின் இடம்பெற்ற படுகொலைகள், யுத்தங்கள், இனச் சுத்திகரிப்புக்கள் எல்லாமே பிற்காலத்தில் மத்திய கிழக்கை கொலைகளமாகவும், சவக்காடாகவும் மாற்றிமையை வரலாற்றில் காண முடிகின்றது.
நடந்தது இதுதான்:
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போது இஸ்ரேலாக இருக்கின்ற பலஸ்தீனம் துருக்கிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 1896ம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு வாழ்ந்த மக்களுள் 95 வீதமானவர்கள் அரபிகள். இங்கிருந்த காணிகளில் 90 வீதம் இவர்களுக்குச் சொந்தமானதாகவே காணப்பட்டன. இங்குள்ள மக்கள் சத்தமிட்டு பேசுவதையோ அல்லது கெட்ட விடயங்கள் பற்றி பேசுவதையோ கேட்பது கூட கடினம். அந்தளவுக்கு அமைதியாகவும் கௌரவமாகவும் மக்கள் வாழ்ந்த காலம் அது.
1897 இல் சுவிட்ஸர்லாந்தின் பேஸில் நகரில் இடம்பெற்ற முதலாவது உலக சியோனிஸ காங்கிரஸ் மாநாட்டில் பலஸ்தீனத்தில் யூத நாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பத்து வருடங்கள் கழித்து 1907ல் லண்டன் காலணித்துவ மாநாட்டில் மத்திய கிழக்கை கொந்தளிப்பு நிலையில் வைத்திருக்கக் கூடிய விரோதப் போக்குடைய ஒரு சக்தியை ஸ்தாபிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த சதித் திட்டம் தான் சியோனிஸ யூதர்களையும் பிரிட்டனையும் ஒன்றிணைத்தது. முதலாம் உலகப் போர் இதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது. இதன் படி முதலாம் உலகப் போரில் இவ்விரண்டு தீய சக்திகளும் ஒன்றிணைந்து துருக்கிப் பேரரசுக்கு முடிவு கட்டின. ஏற்கனவே திட்டமிட்டபடி 1917ல் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் பலஸ்தீனம் கொண்டு வரப்பட்டது. இது இந்தப் பிரதேசத்தில் யூதக் குடியேற்றத்துக்கு வழிவகுத்தது. குறிப்பாக இங்கு பலஸ்தீனர்கள் அடித்து விரட்டப்பட்ட பின் ரஷ்யாவில் வாழ்ந்து வந்த யூதர்கள் குடியேற்றப்பட்டனர்.
பிரிட்டனினதும் சியோனிஸ யூதர்களினதும் சூழ்ச்சி பற்றி எதுவும் அறிந்திராத அப்பாவி பலஸ்தீனர்கள் நிராயுதபாணிகளாக இவர்களை எதிர்த்தனர். ஆனால் ஏற்கனவே இந்த எதிர்ப்பை எதிர்ப்பார்த்திருந்த குடியேற்ற யூதர்கள் ஹகானா, ஸ்டேர்ன், இர்குன், ஸ்வாய்லுமி போன்ற பயங்கரவாத குழுக்களை மத்திய கிழக்கு பயங்கர வாதத்தின் ஞானத் தந்தைகளான மெனாச்சம் பெகின், இட்ஷாக் ஷாமிர், ஏரியல் ஷரோன் ஆகியோர் தலைமையில் உருவாக்கி பலஸ்தீனர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இந்தக் குழுக்கள் பலஸ்தீனர்களை கிராமம் கிராமமாகச் சென்று தேடித்தேடி வேட்டையாடின.
பலஸ்தீன மக்கள் மீது பயங்கரவாதத்தை பிரயோகித்து அவர்களை அங்கிருந்து விரட்டியடித்து அவர்களின் காணிகளை கபளீகரம் செய்வதை குறியாகக் கொண்டு இந்தக் குழுக்கள் செயற்பட்டன.
இந்த சதியின் ஒரு அங்கமாக மெனாச்சம் பெகின் தலைமையிலான குழு சிறுவர் பெண்கள் என்ற பேதம் கூட பார்க்காமல் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்களை கொன்று குவித்தது. ஜெரூஸலத்தில் இருந்து ஒரு சில மைல் தூரத்தில் உள்ள டேர் யாஸின் என்ற கிராமத்தில் மட்டும் இந்தக் குழு 254 பலஸ்தீன உயிர்களைப் பலி எடுத்தது. இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய மெனாச்சம் பெகின் பின்னர் இஸ்ரேலின் பிரதமரானார். அவருக்கு சமாதானத்துக்கான நோபள் பரிசு வழங்கப்பட்ட கேவலமும் வரலாறில் பதிவாகியுள்ளது. டேர் யாஸின் படுகொலைகள் மனித குல வரலாற்றில் இடம் பெற்ற மிக மோசமான படுகொலைகளாகப் பதிவாகியுள்ளன. வியட்நாமில் இடம்பெற்ற ‘மைலாய் படுகொலைகளுக்கு’ ஈடான ஒரு சம்பவமாகவும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த விதமான உதவிகளும் அற்ற பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்து இதை எதிர்த்து நின்றனர். ஆனால் பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தப் பிரதேசத்தில் தனக்கிருந்த ஆணை அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்களை நசுக்கியது. அதையும் மீறி இந்த எதிர்ப்புக்கள் மோசமான கட்டத்துக்கு வந்த போது இந்தப் பிரதேசத்தில் இருந்த தனக்கு விசுவாசமான அரபு கைக்கூலி ஆட்சியாளர்களையும், இராணுவ சர்வாதிகார ஆட்சியாளர்களையும் பிரிட்டன் தூண்டிவிட்டது.
அச்சம் கொண்ட பலஸ்தீனர்கள் தமது உயிரைக் காப்பாற்ற ஓட்டம் பிடித்தனர். அந்த ஓட்டம் அண்டை நாடுகளில் உள்ள அகதி முகாம்களில் அவர்களை கொண்டு போய் சேர்த்தது. இன்னமும் அத்தகைய அகதி முகாம்களில் அவல வாழ்வு நீடிக்கின்றது. போதுமான அளவு யூதக் குடியேற்ற வாசிகள் கொண்டு வரப்பட்டதும் சியோனிஸ்ட்டுகள் பலஸ்தீனத்தைப் பிரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தை பெறும் காரியங்களைத் தொடங்கினர். தங்களுக்காக இந்த அசிங்கத்தை அரங்கேற்றத் தான் அவர்கள் அமெரிக்காவைப் பயன்படுத்தினர்.
அன்றைய காலகட்டத்தில் கருத்தியல் ரீதியாகப் பிளவுபட்டிருந்த அமெரிக்காவும் சோவியத் யூனியனும் பலஸ்தீனத்துக்குள் சியோனிஸ நாட்டை உருவாக்கும் இந்த அசிங்கமான காரியத்தில் காலம் காலமாக கைகோர்த்து பணியாற்றும் படைகளைப் போல்; ஒன்றிணைந்தன. அன்றைய உலகை ஆட்டிப் படைத்த இரண்டு பெரிய வல்லரசுகளையும் சியோனிஸ்ட்டுகள் எந்தளவுக்கு தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.
இவ்வாறாக 1947 நவம்பர் 29ல் பலஸ்தீனத்தை பிரித்து குடியேற்ற யூதர்களுக்கான பாஸிஸவாத நாட்டை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா.வை அடி பணிய வைத்தனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு தாம் வாழ வந்த பகுதியில் ஒரு தேசத்தின் ஆள்புல ஒருமைப்பாட்டை பிரித்து சூறையாட அனுமதியளிக்கப்பட்டது உலக வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.
இந்த உத்தேச யூத நாட்டில் கூட அரபிகள் தான் பெரும்பான்மையாகக் காணப்பட்டனர். மொத்த சனத்தொகையான 1இ008இ900 ல் அரபு யூதர்கள் 509,780 ஆகவும் மற்றவர்கள் 499,020 ஆகவும் காணப்பட்டனர்.
தமது நாடு பிளவு படுத்தப்படும் ஐ.நா.தீர்மானத்தை பலஸ்தீன அரபிகள் எதிர்த்தனர். தமது தாய்நாடு இரண்டாக துண்டாடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மன்னன் சாலமன் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விவிலிய வேதநூல் கதையில் எப்படி ஒரு பிள்ளை இரண்டாகத் துண்டாடப்பட்டு இருவரிடம் கொடுக்கப்படுவதை விட அது மற்றவரிடமே இருக்கட்டும் என்று விட்டுக் கொடுத்து தனது தாய்மையை ஒரு பெண் எப்படி நிரூபித்தாலோ அதேபோன்ற நிலையில் தான் பலஸ்தீனர்கள் காணப்பட்டனர். ஆனால்; துரதிஷ்டவசமாக இந்த இடத்தில் நியாயம் வழங்க வேண்டியவர்கள் மன்னன் சாலமனைப் போல் விவேகமானவர்களாகக் காணப்படவில்லை. மாறாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆதிக்கம் மிக்க உலகில் அவர்களின் சதித்திட்டங்களை எல்லாம் நியாயப்படுத்தி வந்த ஐ.நா சபைதான் இங்கு தீர்ப்பு சொல்லும் நிலையில் இருந்தது.
ஐ.நா மேற்கொண்ட இந்த அநீதியான முடிவு பற்றி பிரபல எழுத்தாளரும் வரலாற்றியலாளருமான எச்.ஜி.வெல்ஸ் குறிப்பிடுகையில் “இரண்டாயிரம் வருடங்களாக உலகில் இல்லாத ஒரு யூத நாட்டை உருவாக்குவது முறையெனில், ஏன் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் பின் சென்று கனானிய காலத்து நாடு ஒன்றை உருவாக்கி இருக்கக் கூடாது. யூதர்களைப் போலன்றி கனானியர்கள் இன்னமும் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரிவினைவாத தீர்மானத்தால் துணிச்சல் கொண்ட சியோனிஸ்ட்டுகள் பலஸ்தீனர்களுக்கு எதிராக பல படுகொலைகளை தொடராகப் புரிந்துள்ளனர். இந்த யூத பயங்கரவாத குழுக்களுக்கு எப்போதெல்லாம் ஆயுதங்கள் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் அதை அமெரிக்கா தாராளமாக அள்ளி வழங்கியது. இப்போதும் அது தொடருகின்றது.
சியோனிஸ படு கொலைகளுக்கு நடுவே 1948 மே 14ல் இஸ்ரேல் என்ற நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஐ.நா தீர்மானத்தை தொடர்ந்து மேலும் பெருமளவான பகுதிகள் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டன.
முன் கூட்டியே திட்டமிடப்பட்டவாறு இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டது. உலகின் மிகவும் கொடுமையான ஒரு சக்தியாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சாசனம், மனித உரிமைகள் பற்றிய சர்வதேச சாசனம் என எல்லாவற்றiயும் மீறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தான் இன்று இஸ்ரேல் அதன் இருப்புக்கான உரிமையையும் கோரி நிற்கின்றது. சியோனிஸ நாடு பிரகடனம் செய்யப்பட்டு 15 நிமிடங்களுக்குள் அமெரிக்காவும் அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியனும் இஸ்ரேலை அங்கீகரித்தன. இந்த இரண்டு நாடுகளுமே இஸ்ரேலின் உருவாக்கத்துக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.
நியாயமான சிந்தனைப் போக்குள்ள சகலரும் இந்த அநியாயத்தை பரவலாக எதிர்த்தனர், கண்டித்தனர். வுhந நேற லுழசம சுநஎநைற ழக டீழழமள என்ற நூலில் ஐ.எப்..ஸ்டோன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் “இந்த சியோனிஸ விடயத்தில் எளிமையான ஒரு நயவுரை காணப்படுகின்றது. 2000 வருட பழமையானவர்களுக்காக திடீரென உரிமை கோரல்கள் விடுக்கப்படுவதாயின் முழு உலகும் மீண்டும் ஒரு தடவை மறுசீரமைக்கப்பட வேண்டும். சியோனிஸம் அதன் ஆரம்பம் முதலே அதன் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள அரபு உலகில பாரிய பேரரசு ஒன்றின்; ஒரு புறக்காவல் பிரிவாகவே செயற்பட விரும்பியுள்ளது. சியோனிஸ அரசு என்ற கருவை உருவாக்கிய தியடோர் ஹெர்ஸ்ல் முதலில் சுல்தான்களையே வெற்றி கொள்ள விரும்பினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் அது உருவாக்கப்பட்டது முதல் அடுத்தடுத்த படு கொலைகளாலும், ஆக்கிரமிப்புக்களாலும் மத்திய கிழக்கை கொலை களமாக மாற்றியது. 1956ல் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பனவற்றுடன் இணைந்து இஸ்ரேல் எகிப்தை ஆக்கிரமி;த்தது. 1967ல் சினாய், காஸா, தென் லெபனான், மேற்கு கரை, கிழக்கு ஜெரூஸலம் மற்றும் கோலான் குன்று பிரதேசம் என்பனவற்றையும் இஸ்ரேல் தனதாக்கிக் கொண்டது. இந்த ஆக்கிரமிப்பு யுத்தங்கள் எல்லாமே அமெரிக்காவினதும், ஐரோப்பிய ஆதரவாளர்களினதும், கொடுங்கோல் அரபு சர்வாதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டவைதான்.
பலஸ்தீனத்தில் அவர்கள் கால் பதித்தது முதல் 65க்கும் மேற்பட்ட பாரிய படுகொலைச் சம்பவங்களைப் புரிந்து ஆயிரக்கணக்கான அப்பாவி பலஸ்தீனர்களைக் கொன்று குவித்துள்ளனர். இதில் மிக அண்மைய சம்பவமாக 2014ல் ஜுலை மற்றும் ஆகஸ்ட் காலப்பகுதியில் காஸாவில் இடம்பெற்ற படுகொலைகளைக் குறிப்பிடலாம். இது கடந்த ஆறு வருட காலத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாரிய படுகொலைச் சம்பவமாகும். அரபு ஆட்சியாளர்கள் குருடர்களாகவும் ஊமைகளாகவும் இருந்து இதனை அனுமதித்துள்ளனர்.
1970ல் ஐ.நாவால் சியோனிஸம் ஒரு வகை இனவாதம் என பிரகடனம் செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பு, படுகொலைகள், சட்டவீனம் என்பன இஸ்ரேல் வரலாற்றில் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. குற்றச்செயல்களும் இரத்தக்கறைகளும் தான் அதன் வரலாற்றுப் பக்கத்தை நிரப்பியுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பூமியில் உலகில் எந்தவொரு பாகத்தில் இருந்து வந்த யூதர்கள் வேண்டுமானாலும் குடியேறலாம் என்பதுதான் இன்றைய நிலை. ஆனால் இங்குள்ள வீடுகளின் சாவிகளும் காணிகளின் உரிமைப் பத்திரங்களும் பலஸ்தீனர்களிடம் இன்னமும் உள்ளன. ஆனால் அவர்களுக்கு இங்கே வருகை தர முடியாது. இஸ்ரேல் தான் உலகில் நிரந்தர எல்லைகள் அற்ற ஒரே நாடு. அது மட்டுமல்ல உலகிலேயே இங்கு மட்டும் தான் படுகொலைகளுக்கு தலைமை தாங்கியவர்களும், யுத்தக் குற்றம் புரிந்தவர்களும் மாறி மாறி பிரதமர்களாகவும் ஜனாதிபதிகளாகவும் தெரிவு செய்யப்படும் விந்தையும் நடக்கின்றது.
பலஸ்தீனர்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றார்கள், காணிகள் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன, பிரத்தியேகமான யூதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பலஸ்தீனர்களின் வீடுகள் தகர்க்கப்படுகின்றன. அவர்களின் பண்ணைகளும் விவசாய நிலங்களும் வாழ்வாதாரங்களும் சிதைக்கப்படுகின்றன. சட்டவிரோத கைதுகளும் சித்திரவதைகளும் தொடருகின்றன. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். காஸா பிரதேசத்தின் மீது எகிப்திய சர்வாதிகார இராணுவ ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் பல ஆண்டுகளாக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. எகிப்தில் மட்டும் 1.5 மில்லியன் பலஸ்தீனர்கள் நிர்க்கதி நிலையில் உள்ளனர். இவ்வாறு இஸ்ரேலின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் ஆகக் கூடுதலான தடவைகள் கண்டனத்துக்கு உள்ளான நாடு இஸ்ரேல் தான். இதுவரை அந்த நாட்டுக்கு எதிராக 120க்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு மட்டும் அல்ல முழு உலகினதும் ஸ்திரப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரே நாடு இஸ்ரேல்தான். அமெரிக்காவினதும் ஐரோப்பிய நாடுகளினதும் ஆதரவு காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத கையாலாகாத நிலையில் ஐ.நாவும் உள்ளது.
மேற்கு உலகில் மட்டும் அன்றி முழு உலகிலும் அரசியல், பொருளாதாரம், நிதி, ஊடகம், களியாட்டம், மற்றும் உள்ள எல்லா துறைகளையும் ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தியாக இஸ்ரேல் மாறியுள்ளதால் நீதி வழங்க வேண்டிய எல்லா சர்வதேச ஜுரிமார்களும் வேறு கதியின்றி மௌனம் காத்து வருகின்றனர்.
பலஸ்தீனர்களுக்கு எதிராக அந்தப் பிராந்தியத்தில் புரியப்பட்ட மற்றும் புரியப்பட்டு வருகின்ற எல்லா குற்றங்களிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பும் காணப்படுகின்றது. இதுதான் யதார்த்தம். ஆனால் அமெரிக்க நெருக்குதலுக்கு அடிபணிந்து அரபு ஆட்சியாளர்களும் அப்பாவி பலஸ்தீனர்களைக் கைவிட்டுள்ளமை தான் பெரிதும் வேதனைக்குரிய விடயமாகும். பல அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் கூட பலஸ்தீனர்களை கைவிட்டு விட்டு அவசர அவசரமாக சியோனிஸத்தை தழுவி வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இன்றைய சூழலில் ஒரு சில லத்தீன் அமெரிக்க நாடுகளைத் தவிர பலஸ்தீனர்களுக்கு குரல் கொடுக்கக் கூடிய எவரும் உலகில் இல்லை. பலஸ்தீனர்கள் மேலைத்தேச ஊடகங்களால் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர். தமது பதவிகளையும், மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களையும், அனுபவித்து வரும் வசதிகளையும் காப்பாற்றிக் கொள்ள அரபு ஆட்சியாளர்கள் பலஸ்தீனர்களை ஒட்டுமொத்தமாக அடகு வைத்துள்ளனர் அல்லது விற்பனை செய்து விட்டனர். இலட்சக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை அடித்து துரத்தி அகதி முகாம்களுக்குள் தஞ்சமடைய வைத்துள்ள அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் என்பன இணைந்து உருவாக்கியுள்ள இன்றைய மத்திய கிழக்கு இதுதான். (முற்றும்)

Post a Comment

0 Comments