நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான சரத் என் சில்வாவும் மன்றில் ஆஜராகியிருந்தார்.
எவ்வாறாயினும், ஊடகங்களினூடாக வௌியான தகவலை அடிப்படையாகக் கொண்டே இன்று, சரத் என் சில்வா மன்றில் ஆஜராகியதாகவும் அவருக்கு அழைப்பாணை ஏதும் விடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், எதிர்வரும் 7 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதம நீதியரசருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு மருதானையில் நடைபெற்ற பேரணியொன்றின்போது, முன்னாள் நீதியரசர் நீதிமன்றத்தை அவமதித்ததாக, சிரேஷ்ட பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, பேராசிரியர் ஹேவாவடுகே சிறில், சிரேஷ்ட பேராசிரியர் பிரஷாந்த குணவர்தன ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments