Ticker

6/recent/ticker-posts

போதைப் பொருள் ஒழிப்புக்கு முப்படையினர் ஒன்றிணைந்த நடவடிக்கை முன்னெடுப்பு

( ஐ. ஏ. காதிர் கான் )

   போதைப் பொருள் பாவனையை நாட்டிலிருந்து  முற்றிலும்  இல்லாதொழிக்கும் பொருட்டு,  முப்படையினர் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக,  பாதுகாப்புப்  படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கருத்திட்டத்தில் உருவான இப்போதைப் பொருள் ஒழிப்புத்திட்டம், இரண்டு வருடங்களை  இலக்காகக்  கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார். 

    போதைப் பொருள் கைமாறலாகும்  கேந்திர மையமாக இலங்கையை,  இதுவரை பாதுகாப்புத் தரப்பினர் அடையாளங்காணவில்லை.  இவ்வாறு இலங்கை தொடர்பில்  கூறப்படுவதில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். 

    போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் பங்களிப்பு மற்றும்  ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கைகள்  தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட  செய்தியாளர் மாநாடு,  கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின்  ஊடக மையத்தில், (08) வெள்ளிக்கிழமை காலை  நடைபெற்றது.

   பாதுகாப்புப்  படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன  தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில்,  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பத்தி, இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அத்தபத்து உட்பட கடற்படை மற்றும் விமானப் படைப்  பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

   பாதுகாப்புப்  படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட  அதிரடிப்படையினருக்கு உதவியாக, முப்படையின் புலனாய்வுத் துறையின் பங்களிப்புடன் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஒன்றிணைந்து நடவடிக்கைகளை  முன்னெடுத்து வருகின்றனர். 

   தரை வழி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கடற்படையினரின் படகுகளும், விமானப் படையின் விமானங்களும்  இந்த நடவடிக்கைகளுக்காகப்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

   எம்மைச்  சுற்றி கடல் வளம் காணப்படுகின்ற ஒரு தீவு இலங்கையாகும்.  இவ்வாறான ஒரு தீவுக்குள், பாதுகாப்புப்  படையினரின் கெடுபிடிகளையும் தாண்டி சிலர் மிகவும் சூட்சுமமான முறையில்,  நாட்டிற்குள் போதைப்பொருளைக் கொண்டு வருகின்றனர். இவற்றில் அனைத்துமே பிடிபடுவதில்லை. இவ்வாறு நாட்டிற்குள் கொண்டு வரப்படும் போதைப் பொருள் மீண்டும் நாட்டிற்கு வெளியில் கொண்டு செல்லப்படுவதுமில்லை. இலங்கையில் ஹெரோயின் போதைப்பொருள்  பாவனையாளர்கள் 45 ஆயிரம் பேர் உள்ளனர் என புள்ளிவிபரங்கள் மூலமாக அறிகின்றோம்.

   இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்தி வரப்படும் பிரதான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாகவும், கடல் மார்க்கமாக நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான  பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கடற்படையினர் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

    நாட்டுக்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதற்கு முன்னர்,  நடுக் கடலில் வைத்து அவற்றை அழித்தால்,  நாட்டில் போதைப் பொருள் பிரச்சினைகள் ஏற்பட இடமிருக்காது.

போதைப் பொருளுடன் வரும் படகுகளையும் சந்தேக நபர்களையும் 12 கடல் மைல் தூரத்துக்குள்ளேயே கைது செய்ய முடியும். இதுவே சர்வதேச சட்டமாகும்.  அதற்கு அப்பால் போதைப் பொருளை எம்மால் அழிக்க மட்டுமே முடியும். 

    நாம் எமக்குக்  கிடைத்துள்ள தகவல்களை வைத்தும்,  உளவுத் தகவல்களை வைத்தும் போதைப்பொருள் சார்ந்த பகுப்பாய்வின் அடிப்படையிலும்,  இலங்கைக்குள் போதைப் பொருள் வரும் பிரதான கடல் மார்க்கைத்தைக் கண்டறிந்துள்ளோம் என்றார்.

Post a Comment

0 Comments