இந்த ஆயுதத்தை வைத்தே அமெரிக்கா உலகில் தனது அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது. உலக நாடுகளை அடிமைப்படுத்தி அட்டகாசம் புரிவதும் இந்த பெட்ரோ டொலரின் புண்ணியத்தில் தான்.
மத்திய கிழக்கின் பாலைவனப் பரப்புகள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பது வெறும் கனிமவளம் அல்ல; அது உலகுக்கே உயிர் கொடுக்கும் 'கறுப்புத் தங்கம்' என போற்றப்படும் எண்ணெய் வளம். உலகிலுள்ள அனைத்து நாடுகளின் நரம்புகளில் ஓடும் எரிசக்தியும் அதுதான்.
இதன் காரணமாகவே எண்ணெய் வளத்தின் மீது எச்சில் வடித்துக் கொண்டு, துப்பாக்கிகைளை கையில் ஏந்திக் கொண்டு பாதாள உலக ”தாதா”வாக அமெரிக்கா உலகமெல்லாம் வேட்டையாடித் திரிகிறது.
உலக நாடுகள் இந்த எண்ணெய் வளத்தைப் பெற வேண்டுமானால், அதற்கு அமெரிக்காவின் 'டொலர்' என்ற நாணயத்தைக் கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும் என்று அமெரிக்கா உலக நாடுகளை மிரட்டி வருகிறது.
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் டொலருக்கு மட்டுமே எண்ணெய்யை விற்க வேண்டும் என்ற விதியை அமெரிக்கா விதித்து வைத்துள்ளது.
இந்த "பெட்ரோ-டொலர்" என்ற அடிமை சாசனம், பலம் வாய்ந்த ஒன்றாக உலகில் இருந்து வருகிறது.
1970-களின் தொடக்கத்தில், அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே இந்த விசித்திரமான “அடிமை சாசனம்” எழுதப்பட்டது.
ஒருவன் தன் விளைநிலத்தில் விளைந்த ஒரு பொருளை விற்பதற்கு, பக்கத்து வீட்டுக்காரன் அச்சடித்த காகிதத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அது எத்தகைய கொடுமையாக இருக்கும்?
அமெரிக்காவின் ஆணையின் படி, சவூதி அரேபியா தனது எண்ணெயை டொலருக்கு மட்டுமே விற்க ஒப்புக்கொண்டது. இதற்கு உபகாரமாக, சவூதிக்கு ராணுவப் பாதுகாப்பை வழங்க அமெரிக்கா உறுதி செய்தது. இதன் விளைவாக, உலகில் எந்த நாடு எண்ணெய் வாங்க நினைத்தாலும், முதலில் அமெரிக்காவின் டொலரை வாங்கி சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தங்களின் அந்நியச் செலாவணி கையிருப்பை (Foreign Exchange Reserves) டொலராகவே வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா தன் விருப்பம் போல டொலர் என்ற நாணயத்தை அச்சடித்து வருகிறது. அமெரிக்க டொலரின் மதிப்பை குறைய விடாமல் உலகமே அதைத் தாங்கிப் பிடித்து வருகிறது.
அமெரிக்காவின் ராணுவ பலத்தை விடவும், அதன் பொருளாதாரப் பலம் வீரியமானது. அந்த வீரியம் இந்த டொலர் என்ற அச்சில்தான் சுழன்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு நாடு அமெரிக்காவின் இந்த கீழ்த்தரமான அரசியலை எதிர்த்தால், அந்த நாட்டின் டொலர் கணக்குகளை முடக்குவதன் மூலம், அந்த நாட்டை ஒரு சொட்டு எண்ணெயை விற்க முடியாமல், நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் ஓர் இக்கட்டான நிலைக்கு அந்நாட்டைத் தள்ள அமெரிக்காவால் முடியும்.
இந்த பெட்ரோ-டொலர் அமைப்பு தகர்ந்தால், அமெரிக்காவின் டொலர் அதன் மதிப்பினை இழக்கும்.
அமெரிக்காவால் மற்ற நாடுகளைப் பொருளாதாரத் தடைகள் மூலம் மிரட்ட முடியாது. இதுவே அமெரிக்காவுக்கு இன்று எழுந்துள்ள மிகப்பெரிய அச்சம்.
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும், மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான நாணயத்தையோ அல்லது வலுவான பொருளாதாரக் கூட்டமைப்பையோ உருவாக்கினால், உலகில் ஜாம்பவானாக எழுந்து நிற்கும் பெட்ரோ-டொலர் அடுத்த நிமிடமே சுருண்டு விழுந்து சின்னாபின்னமாகிவிடும்.
அமெரிக்காவின் பெட்ரோ-டொலர் சாம்ராஜ்யம் என்பது ஒரு பலவீனமான நூலில் தொங்கும் வாள் போன்ற நிலைக்கு இன்று திரும்பி இருக்கிறது.பல நாடுகள் டொலருக்கு மாற்றீடாக தத்தமது நாணயங்களை பயன்படுத்த தயாராகி வருகின்றன.
அந்த நூல் அறுந்துவிடாமல் இருக்க, அடாவடித்தனத்தையும், மத்திய கிழக்கு நாடுகளில் எப்போதும் ஒரு 'போர்ப்பதற்றத்தை' (Controlled Instability) அமெரிக்கா பராமரித்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவினால், அது உலகிற்கு நல்லது; உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கு நல்லது. மத்திய கிழக்கில் அமைதி நிலவுவது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று அது அஞ்சுகிறது.
மத்திய கிழக்கில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டும், சிந்தும் ஒவ்வொரு அப்பாவி மனிதனின் சொட்டு ரத்தமும் அமெரிக்காவையும், அதன் டொலரின் மதிப்பையும் காக்கும் கவசங்களாக உள்ளன.
எண்ணெய் அரசியலில் அமெரிக்காவின் சொல்லுக்குக் கட்டுப்பட மறுக்கும் நாடுகள் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பதற்கு வரலாற்றின் ரத்தக் கறைகள் சான்றாக உள்ளன.
ஆயினும், காலச் சக்கரம் சுழல்கிறது. இந்த அராஜகத்திற்கு எதிராக நாடுகள் விழித்துக்கொள்ளும் ஒரு நாளில், இந்தப் பெட்ரோ-டொலர் எனும் மாயச் சங்கிலி அறுபட்டு போகும். அன்றுதான், வெறும் கடதாசியினால் கட்டமைக்கப்பட்ட இந்த அராஜக டொலர் சாம்ராஜ்யம் அடியொடு சரிந்து விழுந்து மண்ணோடு மண்ணாகும்.
10.01.2026
10.00pm

0 Comments