Ticker

6/recent/ticker-posts

இலங்கை முஸ்லிம்களும் இரண்டு அச்சுறுத்தல்களும்!


இன்று இலங்கை முஸ்லிம்கள் இரண்டு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஒன்று கொரோனா வைரஸ் அடுத்தது தெரண, ஹிரு சிங்கள ஊடகங்கள் பரப்பும் இனவாத பிரச்சாரம்.
இலங்கை மக்களை கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தருவாயில் இலங்கை முஸ்லிம்கள் மீது குறித்த இரண்டு இனவாத ஊடகங்களும் மோசமான இனவாத வெறுப்புப் பிரசாரங்களை முன்னெடுத்து அச்சுறுத்தி வருவதோடு, அந்த மோசமான கருத்துக்கள் வைரலாகி சிங்கள சமூகத்துக்குள் பரவி வருகின்றன. சமூக ஊடகங்களில் வெளிவரும் பெரும்பான்மை இனத்தவரின் கருத்துக்களை பார்க்கும் போது இதை தெளிவாக புரியக்கூடியதாக இருக்கிறது.
துரதிஷ்டவசமாக இந்த ஊடகங்களின் வெறுப்புப் பிரசாரங்களுக்கு இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் ஒரு சில முஸ்லிம் ஆர்வக்“கோளாறு”களின் புத்திகெட்ட செயற்பாடுகள் கூட காரணமாக அமைவதோடு இனவாத வாய்களுக்கு சப்புவதற்கு அவலை இந்த ஆர்வக்“கோளாறு”கள் சப்ளை செய்து கொண்டும் இருக்கின்றன.
இன்று இலங்கையில் பதிவாகியுள்ள 122 கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் 10 பேருக்கும் குறைவான முஸ்லிம்களே பதிவாகியுள்ளனர்.
இந்த இனவாத தெரண, ஹிரு சிங்கள ஊடகங்கள் இரண்டும் முஸ்லிம்கள்தான் கொரோனாவை நாடு முழுவதும் பரப்புகிறார்கள் என்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து வருகின்றன.
முழு நாட்டிற்கும் முஸ்லிம்கள் தொடர்பான ஒரு மோசமான செய்தியை வழங்கி வருகின்றன.
நேற்று நீர்கொழும்பில் மரணித்த முஹம்மத் ஜமால் என்பவரின் ஜனாஸா எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கூட இந்த இரண்டு ஊடகங்களும் மரணித்ததவரை விமர்சனத்திற்குள்ளாக்கியதோடு, முஸ்லிம்கள் தொடர்பான வெறுப்புப் பிரசாரத்தையே கக்கித் தள்ளின.
இந்த ஜனாஸா எரியூட்டப்பட்டது தவறான முடிவாகும். கட்டாயமாக முஸ்லிம்கள் இந்த முடிவை கண்டிக்க வேண்டும். இந்த ஜனாஸா எரிப்பின் மூலம் நிகழ்ந்த தவறை நியாயப் படுத்துவது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டுசேறு பூசும் நடவடிக்கையை இந்த இரண்டு ஊடகங்களும் செய்து வருகின்றன.
முஹம்மத் ஜமால் என்பவரின் ஜனாஸா விவகாரத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் WHO வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
வைரஸ் தொற்றால் மரணிக்கும் ஒரு நோயாளியின் உடலம் அடக்கம் செய்வது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள எந்தவொரு நடைமுறையையும் இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் பின்பற்றப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் இறந்தவரின் உடலத்திற்கு மரியாதையுடனும் மத நம்பிக்கைகளுடனும் இறுதிக்கிரியைகள் இடம்பெற வேண்டும் என்றும் இறுதிக்கிரியைகள் தொடங்குவதற்கு முன்னர் இறந்தவரின் குடும்பத்திற்கு தகவல்கள் முழுமையாகத் தெரிவிக்கப் வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தனது வழிகாட்டலில் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments