சுமார் மூன்று மாத காலமாக குடும்ப உறுப்பினர்களால் கவனிப்பாரற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதான நபர் ஒருவர் நேற்று (12) மரணமடைந்தார்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த இவர் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் திடீர் சுகவீனமுற்ற நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வைத்தியசாலை ஊழியர்களின் பராமரிப்பில் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர், தான் மரணித்தால் தனது உடலைக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளதுடன் தனது உடலை கையளிக்க வேண்டிய நபர் ஒருவரின் பெயரையும் குறிப்பிட்டு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் வாழைச்சேனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் இருந்து மரணமடைந்த நபரின் உடலை பொறுப்பேற்று கல்குடா ஜனாஸா நலன்புரி சேவைகள் அமைப்பின் ஊடாக ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
எச்.எம்.எம்.பர்ஸான்
MN

0 Comments