Ticker

6/recent/ticker-posts

ரவுப் ஹக்கீம் சேர்ந்துள்ள அணியிலேயே மிக மோசமான இனவாதிகள் உள்ளனர் ; ஹக்கீமுக்கு பைரூஸ் ஹாஜி பதிலடி


( ஐ. ஏ. காதிர் கான் )

   பாட்டலி சம்பிக்க ரணவக்க, நடிகர் ரஞ்சன் ராமநாயக்க போன்றோர்,  பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வது பற்றியும், முஸ்லிம் பெண்கள் முகத்திரை  போடுவது பற்றியும் பேசியவர்கள். இவ்வாறானவர்கல்தான் இன்று  அந்தப்பக்கத்தில் சேர்ந்துள்ளனர் என்று, கொழும்பு மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் பைரூஸ் ஹாஜி, கொழும்பு புதுக்கடையில் தெரிவித்தார். 

   ஐக்கிய தேசியக் கட்சி என்பது, ஒரு பரிசுத்தமான கட்சியாகும். இனவாதிகள் எல்லோரும் அக்கட்சியை விட்டும் வெளியேறிவிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியில்தான்  இனவாதிகள் உள்ளனர் என சிலர் கூறுகின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றச் சாட்டாகும். ரவூப் ஹக்கீம்  சேர்ந்துள்ள அணியிலேயே இனவாதிகள் உள்ளனர். பொதுவாக, எல்லாக் கட்சிகளிலும் இனவாதிகள் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.    

அவர் தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,         

இன்று ஐக்கிய தேசியக் கட்சி இரு கூறுகளாகப் பிளவுபட்டுள்ளதற்கான காரணம், பாட்டலி சம்பிக்க ரணவக்க என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அவர் 2025 ஆம் ஆண்டு இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற நோக்கிலேயே  இதைச் செய்தார். அவர்  அதிகளவிலான இனவாதக் கொள்கையுடையவர். 

   எதிர்வரும்  பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, ஐக்கிய தேசியக் கட்சியின்  அடுத்த தலைவராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்தன. அவர் பொறுமையாக இருந்திருந்தால், நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வந்திருப்பார். இவருக்கு அனைத்துவிதமான சலுகைகளும் வழங்கப்பட்டன. கட்சியின் பிரதித் தலைமைத்துவப் பதவியும் வழங்கப்பட்டது.. ஜனாதிபதி வேட்பாளராகவும் அவரை  நியமித்து அதில்  போட்டியிடவும் சந்தர்ப்பம் வழங்கினார்கள். ஒட்டுமொத்தமாக, அவருக்கு எல்லா வகையிலான அதிகாரங்களையும்  வழங்கினார்கள்.  ஐக்கிய தேசியக் கட்சிதான் இலங்கையிலுள்ள மிகப் பெரிய கட்சியாகும். 

ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளவர்கள் பாட்டலி  சம்பிக்க ரணவக்கவை  விரும்புவதில்லை. அவர்தான் திட்டம் போட்டு சஜித் பிரேமதாஸவின் அரசியல் தலைமைத்துவத்தை இல்லாமல்  செய்தவர்.

   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறும் தயாகமகே  ஓர் இனவாதியாக இருந்தால், கடந்த பொதுத் தேர்தலின் போது அம்பாறையில் அவர் எவ்வாறு ஆகக்கூடுதலான  வாக்குகளைப் பெற்றிருப்பார் என நான் அவரிடம் கேட்கிறேன். அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அத்தனை பேரும் அவருக்கு வாக்களித்தமையினாலேயே, அவர் பெரு எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளைப் பெற்றார். 

   அவருடைய ஆடைத் தொழிற்சாலையில் எமது முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தொழில் புரிகின்றார்கள். எமது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த  எல்லா இனவாதிகளும் கட்சியை விட்டும் வெளியேறி விட்டார்கள். இதனால், ஐக்கிய தேசியக் கட்சி தற்போது ஒரு பரிசுத்தமான கட்சியாக மாறியுள்ளது.  பௌத்த சமய மக்கள் கூட இன்று  நம்பிக்கையுடன் பேசக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாக உள்ளது. அதுமாத்திரமல்ல,  முஸ்லிம்களைப் பாதுகாக்கக் கூடிய ஒரே கட்சியாக விளங்குவதும் ஐக்கிய தேசியக் கட்சியாகும். பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரஞ்சன் ராமநாயக்க போன்றவர்கள் எமது  இக்கட்சியிலிருந்து வெளியேறி விட்டனர்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கதான் முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் புத்தகம் எழுதியவர். இப்பொழுது அவர்கள் எல்லோரும் நல்லவர்களாக நடிக்கிறார்கள்.   ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இனவாதம் பேசக் கூடிய தயா கமகே உள்ளார் என்று ரவூப் ஹக்கீம் பேசக் கூடாது.  இதைப் பற்றிப்  பேசுபவர்கள் சிந்தித்துப் பேச வேண்டும். 

   இன்று ரவூப் ஹக்கீம் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களினால்தான், முஸ்லிம்களுக்குப் பெரும்  பிரச்சினையாக உள்ளது. இவர்கள் மீது பெரும்பான்மையின மக்கள்  வெறுப்புணர்வைக் கொண்டுள்ளனர்.  இன்று இவர்களால் தான் முஸ்லிம்கள் நிம்மதியை இழந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 


Post a Comment

0 Comments