இளைஞர் பிரதிநிதிகள் சிலருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டிலிருந்தும் குறிப்பாக மலையகத்திலிருந்தும் போதைப்பொருட்களையும், மதுபானத்தையும் முற்றாக துடைத்தெறியவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எமது முன்னேற்றத்துக்கு ஏதோவொரு விதத்தில் இவை தடையாக இருக்கின்றன என்பது தெளிவு. குறிப்பாக உழைக்கும் பணத்தில் சிலர் பெரும் பகுதியை மதுபானத்துக்கு செலவிடும் அவலநிலையும் காணப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, மதுவற்ற நாட்டை - மலையகத்தை உருவாக்குவதற்காக இளைஞர்கள் பலர் இன்று முன்வந்துள்ளனர். எமது பெண்களும் இதற்கு முழு பங்களிப்பையும் வழங்கிவருகின்றனர். முன்னர் சாராய போத்தலையும், சாப்பாட்டு பார்சலையும்
வழங்கினால் வாக்குகளைப்பெற்றுவிடலாம் என்றதொரு நிலை இருந்தது என நினைத்துக்கொண்டு இன்றும் அவ்வாறு செய்வதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால், அந்த காலம் மலையேறிவிட்டது. எமது இளைஞர்கள் மாற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
எனினும், சில நயவஞ்சக அரசியல்வாதிகள், எப்படியாவது வாக்குகளைப்பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அன்பளிப்பாக சாராயம் வழங்கும் சதிகார வலையை விரித்துள்ளனர். ஆசை வார்க்தைகளைக்கூறி இளைஞர்களை எப்படியாவது அந்த வலைக்குள் வீழ்த்தி சாராயம் வழங்கியேனும் சாதித்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். இப்படியான அரசியலை நாம் வெறுக்கின்றோம். அதனை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு கைவிட்டால் நாம் வேட்பாளர் என்ற நிலையை மறந்து, அவர்களுக்காக வாக்குகேட்க தயாராக இருக்கின்றோம். ஏனெனில் எல்லாவற்றைவிடவும் மக்கள் நலம்தான் எமக்கு முக்கியம்.
சமூகத்தை சீரழித்துவிட்டு வாக்குகளைப்பெற முயற்சிப்பது அரசியல் அல்ல, அதற்கு வேறு பெயர் உள்ளது. இன்று நுவரெலியா மாவட்டத்தில் சந்திக்கு சந்தி சாராயக்கடைகள் உள்ளன. எமது சமூகம் முன்னேறக்கூடாது என்பதற்காக போடப்பட்ட தடைகளில் இந்த சாராயக்கடைகளும் ஒன்று. இதனை இளைஞரகளின் துணையுடன் மாற்றுவோம்." - என்றார்.

0 Comments