Ticker

6/recent/ticker-posts

பலஸ்தீனில் பாடசாலை மீது தாக்குதல் நடாத்திய இஸ்ரேல் இராணுவம்!


பலஸ்தீனின் நப்லுஸ் மாவட்டத்தில்  புரின் என்ற கிராமத்தில் உள்ள  பாடசாலை ஒன்றின் மீது  இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தியதாக  வபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களை அடுத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நப்லுஸ் மாவட்டத்தில் இஸ்ரேலிய குடியேற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பாலஸ்தீனிய அதிகாரி காசன் டக்லஸின் கருத்துப்படி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினா் பாடசாலைக்குள் கண்ணீர்ப்புகை  குண்டுகளை வீசியதால் நூற்றுக் கணக்கான மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வாயுவை சுவாசித்ததன் பின் விளைவுகளை அனுபவித்ததாக கூறியுள்ளாா்.

அண்மைக்காலமாக பாலஸ்தீனிய கல்வி நிறுவனங்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக டக்லஸ் குறிப்பிட்டுள்ளாா். 

பலஸ்தீனில் பாடசாலைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவது பொதுவான விடயமாக மாறி வருவதாகவும் அவா் கூறியுள்ளாா். 

மேற்குக்கரை முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு எதிராக வேண்டுமென்றே, பொறுப்பற்ற முறையில் பல தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்து வருவதாகவும், சர்வதேச சட்டத்தையும், பாதுகாப்பான சூழலில் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமையையும் மீறி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் செயற்பட்டு வருவதாகவும்  பலஸ்தீன கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. .

1967ம் ஆண்டு முதல் பலஸ்தீனின் மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இங்கு பலஸ்தீனியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுவது அன்றாட நிகழ்வுகளாக இடம்பெற்று வருகின்றன.

இஸ்ரேலிய அரசு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் ஆறு இலட்சத்திற்கும் (600,000 ) மேற்பட்ட இஸ்ரேலியர்களை சட்டவிரோதமாக  குடியேற்றியுள்ளது. சர்வதேச சட்டங்களை மதிக்காமல் இஸ்ரேல் இந்த குடியேற்றங்களை உருவாக்கி வருகிறது.

Post a Comment

0 Comments