கடந்த வரவு செலவு திட்டத்தில் “ஒரு லட்சம் வேலை’ என்ற திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு 100 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும் அதற்கான தொகையை அரசால் செலுத்த முடியவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த திட்டங்களை செயல்படுத்திய பல்வேறு ஒப்பந்த நிறுவனங்களுக்கு 25 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் 'ஒரு லட்சம் வேலை' திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதுடன், நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள 14,021 கிராம சேவை பிாிவுகளை உள்ளடக்கி இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் தலைவர்கள் மற்றும் பிரதேச சபை அங்கத்தவா்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதில் 80 வீதமான திட்டங்கள் பயனற்றவை என கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இந்த திட்டங்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சமூக மேம்பாட்டு சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள் போன்ற அமைப்புகளின் ஒப்பந்ததாரர்களால் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சில அபிவிருத்தித் திட்டங்களின் கீழ், ஏற்கனவே மறுசீரமைக்கப்பட்ட வீதிகளை இரண்டாவது தடவையாகவும் தார்போடப்பட்டு , காா்பட் செய்யப்பட்டிருப்பதாக கணக்காய்வுகளிலிருந்து தொிய வந்திருக்கின்றன.
இதுதவிர, ஏற்கனவே செய்யப்பட்ட வீதிகளின் நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகளில் கற்கள் பதிப்பது போன்ற பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு வழிவகுக்காத திட்டங்களுக்கும் பணம் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2021 ஆகஸ்ட் மாதம் அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் முன்னாள் நிதியமைச்சர் உள்ளூராட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு இவ்வாறான திட்டங்களுக்காக 100 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் இவ்வாறான அற்பமான மற்றும் பயனற்ற திட்டங்களுக்கு பணம் செலவழிப்பது தற்போதைய நிதி நெருக்கடியை பெரிதும் பாதித்துள்ளதாகவும் கணக்காய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 Comments