Ticker

6/recent/ticker-posts

றிஷாத் பதியுதீன் சீரோவா? ஹீரோவா?

முஸ்லிம் காங்கிரஸ் நிறுவுனர் மக்கள் மனங்களில் அழியாது வாழ்கிற எம்.எச்.எம். அஷ்ரபின் வழியிலான செயல் வீரன், வடக்கு முஸ்லிம்களுக்கு இன்னுமொரு நூர்தீன் மசூர் என்றெல்லாம் புகழப்பட்டவர் றிஷாட் பதியுதீன். அவர் இப்படியான புகழின் உச்சியை மஹிந்த ராஜபக்ஷவின் அரசில், பஷில் ராஜபக்ஷ தோழமையினால் (முஸ்லிம்களைக் காட்டிக் கொடுத்ததினாலேயே இந்த நட்பு உண்டானது) சாத்தியப்படுத்தியிருந்தார். அரசிலிருந்து இவர் விலகியதற்கு மக்கள் நலன் என்று யாரேனும் அடையாளம் தந்தால் அதுபோலவொரு முட்டாள்தனம் வேறொன்றாகவும் இருக்க முடியாது. அண்மையில் அரசுடான பேரம் பேசுதலில் அமீர் அலிக்கு இவரது கட்சி எம்பிப் பதவியைக் கூட பெற்றிருந்தது. கட்சியிலிருந்து விலகிச் சென்று எதிரணியில் இணைந்த உனைஸ் பாரூக் தன்னை மிஞ்சி விடக்கூடாது என்கிற சுயநலமே இந்த நயவஞ்சத்தைப் புரிய றிஷாட் பதியுதீனைத் தூண்டியிருக்க முடியுமே தவிர வேறொரு காரணமும் இருக்க இடமில்லை.
தேசிய ரீதியாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான பாரிய சதிகள் நிகழ்ந்தபோதும் இவர்கள் அரசுடன்தான் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். நிஜமாகவே மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் அரசிலிருந்து விலகுவதற்கு அந்த சந்தர்ப்பத்தைக் கையாண்டிருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால் அதனை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நலனுக்கான அர்ப்பணம் என்பதாகக் கொண்டாடியிருக்கலாம்.
மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிரான அணி பலம் பெற்று வருவதைப் பார்த்துப் பயந்தும், அரசு தோற்றுவிட்டால் பதவிகளை இழக்க நேரும் என்று தந்திரமாக முடிவு செய்தும் தாவுகிற இந்த செயல் நயவஞ்சகமே.
இந்த செயற்பாடு நிச்சயமாகவே முஸ்லிம்களின் தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துகிற காரியம். முஸ்லிம் தலைவர்களின் நம்பகத்தன்மை சிங்களப் பெரும்பான்மையிடையே ஒரு கறைபடிந்த வரலாற்றையே எழுதிவந்துள்ளது.இவர்கள் எப்போதும் வெல்கிறவர்களின் பக்கமாக தலைசாய்கிறவர்கள், எந்நேரத்திலும் முதுகில் குத்தக்கூடியவர்கள் என்பது தவிர வேறெந்த அடையாளத்தையும் சம்பாதிக்கவில்லை. மைத்திரி அணிக்கும் முஸ்லிம் தலைவர்களின் இந்தப் பச்சோந்தித்தனம் ஒன்றும் புதிதில்லை.
”அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்” என்கிற தமது கட்சிப் பெயரை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுடன் நல்லுறவைப் பேணும் பொருட்டு ”அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” என்பதாக மாற்றிக் கொண்டவர் றிஷாட் பதியூதீன். இப்படி அரசியல் லாபத்திற்காக கட்சிப் பெயரிலிருந்த ”முஸ்லிம்” என்கிற அடையாளத்தையே இல்லாது செய்தவர் இன்று முஸ்லிம் நலனுக்காக தனது ஆதரவுத்தளத்தை மாற்றிக் கொண்டார் என்பது அப்பட்டமான பொய், மட்டுமில்லை அப்பாவி மக்களை ஏமாற்றுகிற செயல்.
1980 களில் ஆரம்பித்த தனித்துவமான முஸ்லிம் அடையாள அரசியல் மிலேனியம் ஆண்டான 2000 த்தின் பிற்பாடு (அஷ்ரபின் மறைவிற்கு பின்) குறுகிய கால இடைவெளிகளில் நிகழ்ந்தேறிய அவசரமான அணி மாறுதல்களினால் பெரிய கட்சிகளிடையேயும் பெரும்பான்மை இனங்களிடையேயும் நம்கத்தன்மையை இழந்து காணப்படுகின்றது. முஸ்லிம்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை விற்பதானது ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குழியில் தள்ளுகிற அரசியல் நடவடிக்கை.
எம்.எச்.எம்.அஷ்ரபிடமிருந்து அரசியல் பாடம் படிக்கத் தவறிய இந்தப் பச்சோந்திகளுக்காக சமூகம் பலிகடாவாக வேண்டுமா? மக்களை சரியான திசையில் வழிநடத்தக்கூடிய அரசைக் கையாளத் தெரிந்த தலைவர்களை ஏன் முஸ்லிம் மக்களால் தெரிவு செய்ய முடிவதில்லை. எப்போதும் உணர்ச்சிபூர்வமாகவே முடிவு செய்கிற அல்லக்கைகளாக முஸ்லிம்கள் இருக்கிறவரை றிஷாட் போன்ற தலைவர்கள்தான் ஹீரோக்கள்.
(ஸர்மிளா ஸெய்யிதின் முக நூலிலிருந்து)

Post a Comment

0 Comments